54 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதல்வர்! மணமக்கள் முகத்தில் அப்படியொரு பூரிப்பு!
சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளிகள் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு செய்த சாதனைகள் குறித்தும் தாம் மேயராக இருந்த போது நடந்த ருசிகர நிகழ்வு குறித்தும் பகிர்ந்துக்கொண்டார்.
அதன் விவரம் வருமாறு;

மாற்றுத்திறனாளிகள் மாநாடு
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் உங்களுக்காக நமது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன். இவை அனைத்தையும் உங்களுக்காக, ஏதோ உங்களுக்கு சலுகை என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம், உங்களுக்குத் தர வேண்டியது எங்களது கடமை, அந்த அடிப்படையில்தான் செய்து கொடுக்கிறோம். மற்ற கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவோம்.

எடுத்தேன் -கவிழ்த்தேன்
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்துவிட்டு போகக்கூடாது. அறிவித்துவிட்டு போய் விடலாம், அதை நிறைவேற்ற வேண்டும். அதுதான், கலைஞருடைய ஆட்சி. அந்த நிலையில் இருந்து, நிச்சயம் அதையும் நிறைவேற்றித் தருவோம் என்ற அந்த உறுதியை, நம்பிக்கையை நான் இந்த நேரத்திலே எடுத்துச் சொல்கிறேன்.

வேடிக்கையாக ஒரு செய்தி
வேடிக்கையாக ஒரு செய்தி சொல்கிறேன், உண்மை செய்தி சொல்கிறேன். என்னவென்றால், 1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, நான் மேயராக பொறுப்பிற்கு வந்தேன். முதன்முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான்தான் பொறுப்பிற்கு வந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும், சென்னை மாநகர மேயராக வந்தபோது, வந்தவுடன் அடுத்த நிமிடமே மழை ஆரம்பித்தது, இருபது நாட்கள் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது, எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் நாங்கள் பார்த்து சீர்படுத்திக் கொண்டிருந்தோம்.

மழை பேயராக
அப்போது கலைஞர் அவர்கள், நானும் பார்வையிட வேண்டும், மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று சொன்னார். உடனே மாநகராட்சி வாகனத்தில் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்துக்கொண்டு, சென்னை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். காரில் போய்க் கொண்டிருக்கும்போது வேடிக்கையாக சொன்னார், ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்தால், மழை பேயராக இருக்கிறது என்று சொன்னார்.

குடிநீர் பிரச்சனை இல்லை
அதுபோல, இப்போது குடிநீர் பிரச்சனையே இல்லை. அந்த அளவுக்கு மழையும் பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையை எப்படி சமாளித்துக் கொண்டிருக்கிறோம்? ஏற்கனவே கடந்த ஆண்டு மழை பெய்தபோது என்ன நிலை? அதுவும் உங்களுக்குத் தெரியும். இப்போது என்ன நிலை? நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. 80 முதல் 95 சதவீதம் தான் முடித்திருக்கிறோம், அதற்கே மக்களிடமிருந்து பாராட்டு வருகிறது. இன்னும் பணிகள் இருக்கிறது. அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செய்து முடிப்போம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் எடுத்துச் சொல்லி, நாட்டில் இப்போது எப்படிப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்யக்கூடிய ஆட்சிதான், உங்கள் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications