அதிமுக அதகளம்! குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்பாத திமுக! ஜென்டில் மேன் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள அமளிதுமளியை பயன்படுத்தி அதில் அரசியல் செய்ய விரும்பாமல் சட்டப்பூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் பல்வேறு காரணங்களை கூறி போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது போல் செய்யாமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர் தாமில்லை என்பதை நிரூபித்துள்ளார் முதல்வர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் விருப்புவெறுப்பற்ற இந்த நடவடிக்கையால் அவருக்கு ஜென்டில் மேன் இமேஜ் உயர்ந்துள்ளது.

அதிமுக அதகளம்
அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற ஒவ்வொரு காட்சியும் சினிமா படத்தை விஞ்சும் வகையில் இருந்தன. அவர் இங்கே வருவதும் இவர் அங்கே செல்வதும் என மாறி மாறி தொங்கோட்டங்கள் ஓடினர் அதிமுக முக்கியப் பிரமுகர்கள். இறுதியாக அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், ஒற்றைத் தலைமை உள்ளிட்ட புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடைக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தது. அதில் பொதுக்குழுவுக்கு தடை வாங்க முடியாவிட்டாலும் கூட புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை வாங்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

குழம்பிய குட்டை
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அரசியல் லாபிகள் மூலம் அரசின் துணையை எதிர்பார்த்தது. அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. இந்தச் சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்திருந்தால் குழம்பிய குட்டையாக காட்சியளிக்கும் அதிமுகவில் பல மீன்களை பிடித்திருக்க முடியும். ஆனால் அது போல் அவர் செய்யாமல் நாகரீகமாக நடந்துகொண்டதோடு சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்.

போலீஸ் பாதுகாப்பு
ஆம், அதிமுக பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் விவகாரத்தில் சட்டபூர்வ முறையில் முடிவெடுக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆட்சி, அதிகாரம் என எல்லாவற்றையும் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள அமளிதுமளியை பயன்படுத்தி அரசியல் செய்வது ஒன்றும் கடினமல்ல. ஆனால் அது போன்ற அநாகரீக அரசியலை அவர் அறவே விரும்பவில்லை.

இமேஜ் உயர்ந்தது
ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் சரி இப்போது எழுந்துள்ள பிரச்சனையின் போதும் சரி, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட விரும்பவில்லை. இதன் மூலம் அவருக்கு ஜென்டில் மேன் என்ற இமேஜ் உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications