Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு! இதுவரை கடந்து வந்த பாதை? ஸ்டாலின் சொல்லும் ஹிஸ்டாரிக்கல் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புகாகச் செய்தாலும், மத்திய அரசு கொண்டு வரும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை திமுக சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2005-ஆம் ஆண்டும் திமுக இடம்பெற்ற மத்திய அரசு மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது என்றும் முதலில் ஆதரிப்பதாகச் சொன்ன பா.ஜ.க அதனை எதிர்த்தது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதேபோல் பா.ஜ.க பெண் உறுப்பினரான உமா பாரதியே இதனைக் கடுமையாக அப்போது எதிர்த்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin has said that DMK welcomes and supports the 33% reservation bill for women brought by the Union government

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு வந்திருப்பார்கள்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் போன்றவற்றைக் கடும் எதிர்ப்புக்கு இடையில் அவசர கதியில் பிடிவாதமாக நிறைவேற்றிய பா.ஜ.க. அரசு - அவற்றுக்காகக் காட்டிய அவசரத்தையோ முனைப்பையோ, எல்லோரும் வரவேற்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற கடந்த 9 ஆண்டுகாலமாகக் காட்டவில்லை.

இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பா.ஜ.க.வினரை வாட்டி வரும் நிலையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி - ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக் கொள்கிறார்கள்.

2016-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி மகளிர் நாள் அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்து பெண் எம்.பி.கள் அனைவரும் சேர்ந்து இதற்காக குரல் கொடுத்தார்கள். '33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ன ஆனது?' என்று கேட்டார்கள். அப்போது பா.ஜ.க. அரசு வாய் திறக்கவில்லை. வாய் திறக்க ஏழு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. பெண்கள் சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறையில் இந்த மசோதாவைக் கொண்டு வரவில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?

சுமார் 27 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் உள்ளது. 1996-ஆம் ஆண்டு தி.மு.க அங்கம் வகித்த ஒன்றிய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டது. 2005-ஆம் ஆண்டும் திமுக இடம்பெற்ற ஒன்றிய அரசு இதனைத் தாக்கல் செய்தது. முதலில் ஆதரிப்பதாகச் சொன்ன பா.ஜ.க எதிர்த்தது. பா.ஜ.க பெண் உறுப்பினரான உமா பாரதியே இதனைக் கடுமையாக எதிர்த்தார். கடந்த காலத்தில் இதை எதிர்த்தவர்களில் தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முக்கியமானவர்.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் முயற்சியின் விளைவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2010-ஆம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் சில கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு அந்த மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டது. 2014-ஆம் ஆண்டும், 2019-ஆம் ஆண்டும் நடந்த தேர்தல்களில் பெரும்பானையைப் பெற்றது பா.ஜ.க அரசு. நினைத்திருந்தால் அவர்கள் அதனை உடனடியாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

2017-ஆம் ஆண்டு தி.மு.க சார்பில் மகளிரணிச் செயலாளரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் டெல்லியில் பேரணி நடத்தினோம். 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது. மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நடந்த தி.மு.க. எம்.பி.கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 9 ஆண்டுகளாக அதிக பெரும்பான்மை உள்ள பா.ஜ.க. அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை.

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022-இன் படி 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 48-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறார்கள். நாடாளுமன்ற சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மூலமாக இதனைச் சரி செய்ய முடியும். அந்த வகையில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.

பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தார். நாடாளுமன்ற - சட்டமன்றங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெற்றி பெற வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். இவர்கள் இருவரது சாதனைகளும் இப்போது நினைவு கூரப்பட வேண்டியவை ஆகும்.

காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புகாகச் செய்தாலும், இப்போதைய பிரச்சினைகள் அனைத்தையும் திசைதிருப்பச் செய்தாலும், ஒன்றிய அரசு கொண்டு வரும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+