இந்துசமய அறநிலையத்துறைக்கு அதீத முக்கியத்துவம்! கோடிக்கணக்கில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த ஸ்டாலின்!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து விரோதப் போக்கை கடைபிடிக்கும் என தேர்தலின் போது இந்துத்துவா அமைப்புகள் பிரச்சாரம் செய்த நிலையில், அதனை தவிடுபொடியாக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து கவனித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ராஜகோபுரங்கள், மகா மண்டபம், மலைப் பாதை சீரமைத்தல், என திருக்கோயில் திட்டப்பணிகளை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தொடர்ந்து துவக்கி வைத்து வருகிறார்.
அந்த வகையில் இன்று கூட இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 13 திருக்கோயில்களில் ரூ.56.18 கோடி மதிப்பீட்டிலான 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்துள்ளார். அது தொடர்பான விவரம் வருமாறு;

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதி உலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

திருக்கோயில் திட்டப்பணிகள்
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 56 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல், மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

புதிய வாகனங்கள்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டல், திருக்கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை கண்டறிந்து அளவீடு செய்தல், திருக்கோயில்களின் திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில், அவர்கள் பயன்பாட்டிற்காக 1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 19 புதிய வாகனங்களை வழங்கினார்.

ஸ்டாலின் செயல்பாடு
திமுக ஆட்சிக்கு வந்தால் இந்து விரோதப் போக்கை கடைபிடிக்கும் என தேர்தலின் போது வலதுசாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்த நிலையில், அதனை தவிடுபொடியாக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications