தீரன் சின்னமலை பிறந்தநாள்! தயங்கிநின்ற உதயநிதி! முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்திய கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவில், அமைச்சர்கள் சக்கரபாணி, வெள்ளக்கோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, முத்துச்சாமி, ராஜகண்ணப்பன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்த வந்த முதல்வர் ஸ்டாலினை நோக்கி, தமிழகத்தின் நிரந்தர முதல்வரே என அங்கிருந்த கொ.ம.தே.க தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.

தீரன் சின்னமலை
சுதந்திர போராட்ட வீரரும் கவுண்டர் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவருமாக திகழும் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களுடன் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.

உதயநிதி தயக்கம்
இதனிடையே மரியாதை செலுத்தும் நிகழ்வின் போது மூத்த அமைச்சர்களுக்கு வழிவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின். இதனை கவனித்த கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் கொங்கு ஈஸ்வரன், உதயநிதியை நோக்கி இங்கே வாங்க, முன்னுக்கு வாங்க என வாஞ்சையுடன் அழைத்து முன்னிலைப்படுத்தி அவரை பெருமைப்படுத்தினார்.

மேயர் ப்ரியா
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் காரை விட்டு இறங்கியதும் அவருக்கு அமைச்சர்கள் வரிசையாக புத்தகங்களும், பூங்கொத்துகளும் கொடுத்து வரவேற்றார்கள். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக பின்னால் நின்ற சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, தனது கையில் வைத்திருந்த புத்தகத்துடன் ஓடோடிச் சென்று அதை முதல்வருக்கு கொடுத்து வரவேற்றார். பின்னால் இருந்து வந்த மேயரின் குரலை கேட்டு ஒரு நொடி நின்று திரும்பிப்பார்த்து அந்தப் புத்தகத்தை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.

உதயநிதி கார்
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் தாம் எப்போதும் பயன்படுத்தும் டிஃபெண்டர் காருக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலினின் ரேஞ்ச் ரோவர் காரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இதனிடையே முதல்வர் ஸ்டாலினை நோக்கி, தமிழகத்தின் நிரந்தர முதல்வரே என அங்கிருந்த கொ.ம.தே.க தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications