திமுக உதயநிதியும் பாஜக அண்ணாமலையும் திடீர் சந்திப்பு..என்ன பேசினார்கள்?
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
சென்னை: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் குறித்து உதயநிதியிடம் அண்ணாமலை கேட்டறிந்தார்.
சென்னை வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேசின் தாயார் புஷ்பா நேற்று காலமானார். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக இளைஞரணி செயலரும், எம்எல்ஏவுமான உதயநிதியும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது இருவரும் சந்தித்து பேசினர்.

திமுக மீது குற்றச்சாட்டு
தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்று 14 மாதங்கள் முடிவடைந்த நிலையில் நாள்தோறும் திமுக-பாஜக இடையே வார்த்தை போர் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மின்வாரியத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு, முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தில் குடும்பத்தோடு சுற்றுலா, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கியதில் டெண்டர் முறைகேடு என ஒன்றன்பின் ஒன்றாக திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

திமுக பதிலடி
இதற்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது அதிமுக ஆட்சி காலத்தின் பொழுது அமைச்சர்களிடம் பாஜகவினர் பணம் பெற்றதாகவும் புகார் கூறியிருந்தது. மேலும் கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க பாஜகவிற்கு அதிமுக பணம் கொடுத்ததாகவும், திமுக கூறியிருந்தனர். மேலும் அதிமுக அமைச்சர்களிடம் இருந்து பணம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை பாஜக மறுக்க முடியுமா என்றும் திமுகவினர் சவால் விடுத்திருந்தனர்.

வார்த்தை போர் நீடிப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 630 கோடி ரூபாய்க்கு நஷ்டஈடு வழக்கும் தொடர்ந்து இருந்தனர்.
திமுக பாஜக இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் யார் எதிர்க்கட்சி என்ற கேள்வியும் தமிழகத்தில் இருந்தது பாஜகவினர் நாங்கள் தான் எதிர்க்கட்சி என கூறி வந்தனர் இந்த நிலையில் உதயநிதியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேருக்கு நேர் சந்தித்து பேசிய சம்பவம் தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேருக்கு நேர் சந்திப்பு
அரசியலில் அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினும் நேர் எதிராக உள்ள நிலையில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். சென்னை வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேசின் தாயார் புஷ்பா மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும், உதயநிதியும் நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
Recommended Video

கொரோனா தொற்று
அப்போது கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை கேட்டறிந்தார். ஐசரி கணேஷ், பா.ஜ., நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். என்னதான் அரசியலில் எதிரும் புதிருமாக சண்டை போட்டுக்கொண்டாலும் நேருக்கு நேர் சந்தித்த போது ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதில் இளைய தலைமுறை அரசியல்வாதிகளின் நாகரீகம் வெளிப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications