பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்! டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நாளை இந்தக் கூட்டத்துக்கு இடையே முதலமைச்சர்கள் யாரையும் பிரதமர் மோடி தனியே சந்தித்து பேச வாய்ப்பில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை இரவே சென்னை திரும்புகிறார்.

ஜி20 மாநாடு
ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தவுள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோடி நாளை டெல்லியில் நடத்துகிறார். இதில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களை அழைத்து பேசும் பிரதமர் மோடி, ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக பேசவுள்ளார். இதில் பங்கேற்பதற்காக நாளை காலை டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை இரவே சென்னை திரும்புகிறார்.

தனிப்பட்ட சந்திப்பு
முன்னதாக பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெளிவாகிறது. இதனிடையே ஜி20 மாநாடு தொடர்பாக 32 துறைகளின் சார்பில் 200 ஆலோசனைக் கூட்டங்களை இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற இலக்குடன் ஜி20 மாநாடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வண்ண விளக்குகள்
ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தவுள்ளதால் இந்தியா முழுவதும் உள்ள தொல்லியல் சின்னங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாமல்லபுரத்தில் உள்ள 5 ரதம், வெண்ணை பாறை, வேலூர் கோட்டை, உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் ஜோடிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒத்துழைப்பு
ஜி20 மாநாட்டுக்கு தமிழக அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதை நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி 20 மாநாடுக்கு இந்தியா தலைமை வகிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications