2 நாள் மட்டன், சிக்கன் சாப்பாடு.. சமூகநீதி ஹாஸ்டல்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவித்த புதிய நடைமுறை
சென்னை: தமிழகத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளின் நிலை குறித்து வந்த புகார்களை அடுத்து, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதிகாரிகளுக்கு மிகக் கடுமையான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ஏழை எளிய மாணவ, மாணவியரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை இப்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவியர் தங்கிப் படிப்பதற்காக, பல்வேறு அரசு துறைகளின் கீழ் மொத்தம் 2,739 சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் இப்போது 4ம் வகுப்பு முதல் கல்லூரிப் பட்டப்படிப்பு வரை பயிலும் சுமார் 1.79 லட்சம் மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருகிறார்கள்.

சமூகநீதி விடுதிகள்
பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ள ஏழை மாணவ, மாணவியருக்கு மட்டுமே இந்த விடுதிகளில் முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் இதற்கான முக்கிய விதிமுறையாகும்.
ஆனால், முந்தைய ஆட்சிக் காலங்களில் இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் எம்பி-க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தனிப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வந்துள்ளது.
மாணவர்களுக்கு சாப்பாட்டு மெனு
இதன் காரணமாக, உண்மையிலேயே தகுதியும் வறுமையும் உள்ள பல ஏழை மாணவர்களுக்கு இந்த விடுதிகளில் இடம் கிடைக்காமல், அவர்கள் ஏமாற்றமடையும் ஒரு அவல நிலை தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.
அதேபோல், இந்த விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களின் உணவுக்காக மட்டுமே அரசு மாதந்தோறும் ஒரு மாணவருக்கு தலா 1,000 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை பெருந்தொகையை செலவிட்டு வருகிறது.
மாணவர்களுக்கு காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளையும் சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதும், இதற்கென பிரத்யேக மெனு தயாரிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், நடைமுறையில் இந்த உணவுப் பட்டியல் பெரும்பாலான விடுதிகளில் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.
முதலமைச்சர் விஜய் உத்தரவு
இந்த சூழ்நிலையில்தான், முதல்வர் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஒரு அவசர மற்றும் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூகநீதி விடுதிகளின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
அப்போது அதிகாரிகளுக்கு மிகக் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்த முதல்வர் விஜய், சமூகநீதி விடுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவ - மாணவியர் சேர்க்கை விஷயத்தில் எவ்விதப் பரிந்துரைகளுக்கும் இடம் தராமல், உரிய விதிமுறைகளை மட்டுமே கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கறாராக கூறியிருக்கிறார்.
சிக்கன், மட்டன், முட்டை
அதைவிட முக்கியமாக, மாணவர்களின் உணவு விஷயத்தில் இனி எந்த சமரசமும் செய்யக் கூடாது என்று குறிப்பிட்ட முதல்வர், விடுதிகளில் வாரத்தில் 5 நாட்கள் முட்டை வழங்குவதையும், ஒரு நாள் மட்டன் மற்றும் ஒரு நாள் சிக்கன் வழங்குவதையும் அதிகாரிகள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, சமைப்பதற்காக வாங்கி வரப்படும் மட்டன் மற்றும் சிக்கன் ஆகியவை உரிய எடையில் இருக்கிறதா என்பதைத் தீரச் சரிபார்த்து, அதன்பிறகே சமைத்து பரிமாற வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.. முதல்வரின் இந்த அதிரடி உத்தரவுதான், விடுதி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது...!!












Click it and Unblock the Notifications