வேற லெவல்! 15 லட்சம் மாணவர்களின் வயிறு குளிரும்.. காலை உணவுத் திட்டத்திற்கு 400 கோடி ஒதுக்கி அரசாணை!
சென்னை : முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ. 404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டம் மூலம் இனி 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் மதுரையில் தொடங்கப்பட்டது. முதலில் 15 மாநகராட்சிகள் மற்றும் 23 நகராட்சிகளில் அமைந்துள்ள 539 பள்ளிகளில் பயிலும் 50 ஆயிரத்து 306 மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.
அடுத்த கட்டமாக 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் 56 ஆயிரத்து 98 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைந்து வருகின்றனர். தற்போது தினசரி காலை உணவு சாப்பிடக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 404.

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய ரூபாய் 404 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15,75,900 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி மாணவர்களிடையே பேசும்போதெல்லாம், காலை உணவைத் தவிர்க்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டு வருகிறார். மாணவர்கள் பசியோடு இல்லாமல், கற்க வசதியாக ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், இனி 15.75 லட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்க உள்ளது.












Click it and Unblock the Notifications