இன்று முதல் ‘முதலமைச்சர் கோப்பை’ மாநில அளவிலான போட்டிகள்: "களம் காத்திருக்கிறது" வாழ்த்திய ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் இன்று முதல் ஜுலை 25ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் மூன்று லட்சத்து எழுபது ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ஒலிம்பிக் தடகள வீராங்கனை செல்வி ரேவதி மற்றும் சர்வதேச வாலிபால் வீரர் வைஷ்ணவ் ஆகியோர் ஜோதி சுடரினை ஏந்தி வர, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டு ஜோதியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முதலமைச்சர் கோப்பையை அறிமுகப்படுத்தி, மாநில அளவிலான போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.
கிரிக்கெட் போட்டி அசோக் நகர், மெரினா கடற்கரை, குருநானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, போரூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆகிய இடங்களிலும், பேட்மிண்டன் போட்டி, சிலம்பம், டேபிள் டென்னிஸ், மாற்றுத்திறனாளி விளையாட்டுகள் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும், நீச்சல் போட்டி வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்திலும், டென்னிஸ் நுங்கம்பாக்கத்திலும், ஆக்கி போட்டியாஅது ராமச்சந்திரா பல்கலைக்கழகத்திலும், பீச் வாலிபால் மெரினா கடற்கரையிலும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்- வீராங்கனைகள் சென்னை வந்து போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள், பயிற்றுநர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக சென்னையில் 2000-க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான போட்டி தொடக்க விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், "களம்நமதே எனும் வெற்றி முழக்கத்தோடு முதலமைச்சர் கோப்பை-2023, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்தோம். 38 மாவட்ட வீரர் - வீராங்கனையரின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்த வண்ணமயமான நிகழ்வில், மாநில அளவிலானப் போட்டிக்கான ஜோதியை ஏற்றி வைத்து, முதலமைச்சர் கோப்பையை அறிமுகம் செய்தோம். மாநில அளவிலான போட்டிகளில் வென்று, தேசிய - சர்வதேச அளவில் ஆட்டநாயகர்களாக உருவெடுக்க நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையரை வாழ்த்தினோம்." எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் "களம் காத்திருக்கிறது, சாதனைகள் பல படைத்திடுங்கள் தமிழ்நாட்டு வீரர்களே! உங்களை வாழ்த்த வெற்றிக் கோப்பைகளுடன், எல்லைகள் கடந்து சாதனைச் சிகரங்களைத் தொடுவதைக் காண ஆவலாய் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications