சென்னையில் திடீர் கனமழை வந்தாலும் வெள்ளம் வராமல் தடுக்க ரெடி.. ஆக்ஷனில் இறங்கிய தலைமை செயலர்!
சென்னை: சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இன்று காலையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகர ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கனமழையை எதிர்கொள்ள சென்னை மட்டுமல்லாது மதுரை உள்ளிட்ட பிற நகரங்களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, "சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
அத்துடன் மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தீவிரமாக உள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை தோறும் சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்குப் பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.
இந்நிலையில் தான், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும் என்றும், தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்ட கால சராசரிப்படி 87 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையடுத்து பருவமழையை எதிர்கொள்ள தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேசிய மருத்துவ திட்டபணிகள் இயக்குநர், பொது சுகாதார இயக்குனர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ நலப் பணிகள் இயக்குநர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்வரும் மழைக் காலத்தில் மருத்துவத் திட்டங்களை செயல்படுத்துவது, மழைக்காலங்களில் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்வது, பேரிடர் நேரங்களை சமாளிப்பது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று காலையிலேயே அதிரடியாக ஆய்வில் இறங்கியுள்ளார் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா.












Click it and Unblock the Notifications