அசிங்கமாக பேசுவார்.. பிரம்பால் அடிப்பார்.. அம்மாவை அவமானப்படுத்தினார்.. சின்மயியிடம் குமுறிய மாணவி!
சென்னை: சென்னை சாந்தோம் பள்ளியில் ஆசிரியர் பால் அமலன் என்பவர் கெட்ட வார்த்தைகளை கொண்டே மாணவ, மாணவிகளை அழைத்ததாக மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார். இந்த புகாரையும் பாடகி சின்மயி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக பள்ளிகளில் ஆசிரியர் எனும் போர்வையில் சில காமக் கொடூரன்கள் செய்யும் அட்டூழியங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ராஜகோபாலன் அத்துமீறி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சாந்தோம் பள்ளி மாணவி ஒருவர் பாடகி சின்மயிக்கு அவர் பள்ளியில் அனுபவித்த பாலியல் கொடுமைகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் சின்மயி வெளியிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை
அதில் அந்த மாணவி கூறுகையில், பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி. இது போன்று என்னுடைய அனுபவங்களையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். நான் பிளஸ் 2 படிக்கும் போது இது போன்ற ஒரு பிரச்சினையை சந்தித்தேன்.

ஆசிரியர்
சாந்தோம் உயர்நிலை பள்ளியில் ஆசிரியரான பால் அமலனால் நான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன். அவரது தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத வார்த்தைகளையே அவர் பள்ளியில் பிரயோகிப்பார். மாணவர்களை திட்டும் போது மிகவும் மோசமான வார்த்தையில் அவர்களுடைய கேரக்டரை மிகவும் மோசமாக சித்தரிக்கும் வார்த்தையை வைத்து கூப்பிடுவார்.

தவறான பேச்சு
அது போல் மாணவிகளையும் வேசி என்ற அர்த்தத்தில் வரும் ஒரு லோக்கல் வார்த்தையை பிரயோகித்து அழைப்பார். இதனால் நான் அவரை எதிர்த்தேன். எனவே அவருக்கு என்னை கண்டாலே பிடிக்காது. காரணமே இல்லாமல் என்னை பிரம்பால் அடிப்பார். என் அம்மாவை பள்ளிக்கு வரச் சொல்லுவார்.

அவமானம்
அங்கு என் அம்மாவையும் குடும்பத்தினரையும் மோசமாக பேசி அவமானப்படுத்தினார். இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, அவரை சந்தித்து விட்டு வந்த என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் இருந்தது. எனக்கு யாரும் உதவவில்லை. பிராக்டிக்கல் மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக மிரட்டினார் என அந்த பெண் புகார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications