சின்னம்மா வர்றாங்க போகாதீங்க! திமுகவுக்கு "திமிங்கலம்" சிக்குதா? சசிகலாவுக்கு சொந்த கட்சியிலேயே அடி?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், சசிகலா தலைமையிலான அணிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடத் தயாராகும் சசிகலாவுக்கு, அவரது சொந்தக் கட்சி நிர்வாகிகளே அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியேறத் திட்டமிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்துள்ள சசிகலாவுக்கு, அவரது சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம்..

கட்சியின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், பூவை கந்தன், திண்டிவனம் ஷெரிஃப் மற்றும் எல்லாபுரம் ரஜினி ஆகியோர் சசிகலாவின் தன்னிச்சையான செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ளனராம்..
சொந்த கட்சியியே அடி?
குறிப்பாக, தங்களை முறையாக ஆலோசிக்காமல் தேர்தல் முடிவுகளை எடுப்பதாலும், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிகக் குறைந்த இடங்களிலேயே வேட்பாளர்களை அறிவித்ததாலும் இவர்கள் கட்சியிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ள இந்த முக்கிய நிர்வாகிகள், விரைவில் தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் நேரத்தில் சசிகலாவின் மிக நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர்களே வெளியேறுவது, சசிகலா - ராமதாஸ் கூட்டணிக்கு ஒரு பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த திட்டமிட்டுள்ள சசிகலாவுக்கு, இந்த உட்கட்சி பூசல் மற்றும் நிர்வாகிகளின் வெளியேற்றம் அவரது அரசியல் செல்வாக்கைச் சிதைக்கும் ஒரு முக்கியச் சவாலாக மாறியுள்ளதாக தெரிகிறது.
விகே சசிகலா டென்ஷன்
எனினும் தன்னுடைய பிரச்சாரத்தை வீர்யத்துடன் மேற்கொண்டு வருகிறார் சசிகலா.. நேற்றைய தினம்கூட, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தனது கட்சியின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்..
இந்தப் பொதுக்கூட்டத்தில் சசிகலா நிகழ்த்திய உரை, அரசியல் விமர்சனங்களைக் காட்டிலும் உணர்ச்சிப் போராட்டமாகவே அமைந்துவிட்டது என்று சொல்லலாம். காரணம், பிரச்சார மேடையில் பேசிய சசிகலா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தான் எதிர்கொண்ட அரசியல் நெருக்கடிகளைப் பட்டியலிட்டார்.
வருத்தங்கள் - அதிருப்திகள்
"தன்னால் அடையாளம் காட்டப்பட்டு, நம்பிக்கையின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்பட்டவர்களே, தான் சிறை சென்ற மூன்றாவது மாதத்திலேயே தனக்கு எதிராகத் திரும்பினார்கள் என்று ஆதங்கத்துடன் சொன்னார்..
சிறைவாசம் முடிந்து திரும்பியபோது, தனக்கு கட்சி கொடியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது முதுல் தமிழக எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டது. வரை அனைத்தையும் தொண்டர்களிடம் விலாவரியாக விவரித்தார்.
குறிப்பாக, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, பராமரிப்புப் பணி என்ற பெயரில் மணிமண்டபம் பூட்டப்பட்டது தன்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகதையும் பகிர்ந்து கொண்ட சசிகலா, இத்தனை துரோகங்களையும் கடந்து தான் மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது, தொண்டர்களையும் மக்களையும் காக்கவே என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
சின்னம்மா வர்றாங்க
முன்னதாக, சசிகலாவின் வருகைக்காகச் சோழவந்தான் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். சசிகலா மேடைக்கு வருவதற்கு முன்பாக வேட்பாளர் பாலமுருகன் உரையாற்றி, வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்..
உடனே அங்கு அங்கிருந்த பொதுமக்கள், பிரச்சாரம் நிறைவடைந்துவிட்டது என்று தவறாக கருதிய பெண் தொண்டர்கள் கூட்டத்திலிருந்து வெளியேற ஆரம்பித்து விட்டனராம்.
நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய கட்சி நிர்வாகிகள், "சின்னம்மா வந்து கொண்டிருக்கிறார், அவர் வந்த உரையாற்றுவார்.. அதற்கு பிறகு செல்லலாம்" என மக்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டு மீண்டும் அவர்களை அமர வைத்தார்களாம்.
ஆக, ஒருபுறம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியேறத் திட்டமிட்டு வருவதும், மறுபுறம் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் கலைந்து செல்வதும் சசிகலாவின் 2026 தேர்தல் பயணத்திற்குப் பெரும் சோதனையாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications