சென்னையில் பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் இடையே சண்டை.. ஒருவருக்கு மாவுக்கட்டு! அதிர்ந்த மக்கள்
சென்னை: சென்னையில் நடுரோட்டில் பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் இரண்டு பேர் கடும் வாக்குவாதம் செய்து சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒரு போலீஸ்காரர் தள்ளிவிட்டதில் மற்றொரு போலீஸ்காரருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
சென்னையில் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருக்கும் போலீசாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதை பார்க்க முடியும். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் சிலர் போக்குவர்த்து போலீசார் அபராதம் விதிக்க முற்படும் போது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் பதிலுக்கு போலீசார் கண்டிக்கும் நிகழ்வுகளும் சென்னை உள்பட தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாக உள்ளது.

சில இடங்களில் போலீசாரும் பொதுமக்களிடம் அதிகாரத்தை மீறி நடந்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் இத்தகைய சம்பங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
இதற்கிடையே சென்னை பெரம்பூரில் நேற்று ஒருபடி மேலே போய் இரண்டு போலீஸ்காரர்கள் நடு ரோட்டில் அடித்துக்கொண்டுள்ளனர்.. இதில் ஒரு போலீஸுக்கு கால் முறிந்தது. அதிர்ச்சி அளிக்க கூடிய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை கொண்டித்தோப்பு வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். 39 வயதான இவர், சென்னை பெருநகர நுண்ணறிவு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த 2 வடமாநில வாலிபர்கள், போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் மீது உரசுவதுபோல் வந்து முந்திச்சென்றனர்.
இதனால், கோபம் அடைந்த பால்சுப்ரமணியம், அந்த வடமாநில இளைஞர்களை பிடித்து பைக்கை கவனமாக ஓட்டிசெல்லமாட்டாயா? என கண்டித்து இருக்கிறார். போலீஸ்காரர் சுப்ரமணியம் சாதாரண உடையில் இருந்ததால், வடமாநில இளைஞர்கள் பதிலுக்கு பதில் பேசியுள்ளனர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு சாலை பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், 3 பேரிடமும் ஏன் இங்கு நின்று சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு நுண்ணறிவு போலீஸ் சுப்ரமணியம், நடந்த சம்பவம் பற்றியும், தானும் ஒரு போலீஸ்தான் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், போலீஸ் என்றால் ஐடி கார்டை காட்டுங்கள் என்று டிராபிக் போலீஸ் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்தாக சொல்லப்படுகிறது. இதனால், இரண்டு போலீஸ்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த கேப்பில் அந்த இரண்டு வடமாநில இளைஞர்களும் எஸ்கேப் ஆனார்கள்.
இதற்கு மத்தியில் அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அங்கு வந்து போக்குவரத்து போலீஸ்காரருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதனால் 3 போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடுரோடு என்று கூட பாராமல் அங்கேயே சண்டை போட்டனர். டிராபிக் போலீஸ்காரர்கள் கையால் தாக்கி கீழே தள்ளிவிட்டதில், நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் பாலசுப்பிரமணியம் கீழே விழுந்துள்ளார். ஆனால், தொடர்ந்து அவரால் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு அடிபட்டுள்ளது.
பின்னர் போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருவரும் அங்கு இருந்து கிளம்பியிருக்கிறார்கள். பின்னர் பாலசுப்பிரமணியம் தனது நண்பரை அழைத்துக்கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் போலீஸ்காரர் பாலசுப்பிரமணியத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பாலசுப்பிரமணியத்துக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வட மாநில இளைஞர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸ்காரர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பாலசுப்பிரமணியம் சாதாரண உடையில் இருந்ததும், டிராபிக் போலீசாரிடமும் ஐடி காட்டாததும்தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என கூறப்படுகிறது. பட்ட பகலில் சாலையில் போலீஸ்காரர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications