Journey of Vijay: விஜய்யின் திரை பயணம் எப்படி அவரின் அரசியல் ப்ளூபிரிண்ட்டாக மாறியது? இதை கவனிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு "மாஸ் ஹீரோ"வாக மட்டும் உருவாகவில்லை. பல வருடங்களாக அவர் கட்டியெழுப்பிய திரைபட இமேஜ், அநீதிக்கு எதிராக நிற்கும் ஒருவன், ஏழை மக்களின் பக்கம் பேசும் ஒருவன், ஊழலுக்கு எதிராக சண்டை போடும் ஒருவன், அதிகாரத்தை நேராக கேள்வி கேட்கும் ஒருவன் என்ற அடையாளத்தில்தான் வளர்ந்தது. அந்த இமேஜ்தான் இன்று அவரது அரசியல் பயணத்தைப் புரிந்துகொள்ளும் முக்கிய சாவியாக மாறியுள்ளது.

விஜய்யின் சினிமா பயணத்தைப் பார்க்கும்போது ஆரம்பத்தில் அவர் ஒரு பக்கா காதல் நாயகன். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் - இந்த வரிசை முழுக்க ஒரு மென்மையான காதல் ஹீரோவின் முகம். குடும்பம், காதல், நட்பு, உணர்ச்சி - இவைதான் அந்த விஜய்யின் அடையாளங்கள். ஆனால் அதே நடிகர் சில ஆண்டுகளில் திரையில் முற்றிலும் வேறொரு முகமாக மாறினார். அந்த மாற்றத்தின் மையத்தில் நின்ற படம் பகவதி.

விஜய்யை மாற்றிய அரசியல் படம்

பகவதியை இன்று மீண்டும் பார்த்தாலும் அது வெறும் ஆக்ஷன் படம் மாதிரி தோன்றாது. ஒரு சாதாரண மனிதன், தன்னுடைய குடும்பத்தையும் தம்பியின் கனவையும் காப்பாற்றிக்கொள்ள, அரசியல் அதிகாரம், ரவுடித்தனம், அதிகார திமிர் கொண்டவர்களை நேராக எதிர்க்க வேண்டிய நிலை - அதுதான் அந்தப் படத்தின் உட்கரு. இது விஜய்யை "காதல் பையன்" இமேஜிலிருந்து "நான் இருந்த இடத்திலிருந்து எழுந்து எதிர்க்கத் தெரியும்" என்ற மாஸ் ஹீரோவாக மாற்றிய படம்.

அந்தப் படத்தில் அவர் ஒரு பெரிய அரசியல்வாதி இல்லை, அமைப்பின் உள்ளே இருக்கும் அதிகாரவாதி இல்லை. தெருவில் இருக்கும் ஒரு சாதாரண மனிதன். ஆனால் அவன் குடும்பத்தைத் தொட்டவுடன், அவன் முன் நிற்கும் அதிகார அமைப்பையே சவால் செய்கிறான். இதுதான் பிறகு விஜய்யின் பல படங்களில் பல வடிவங்களில் மீண்டும் மீண்டும் வந்த கோடு. அதனால் பகவதியை விஜய்யின் திரை அரசியலின் முதல் பெரிய சைனாக பார்க்கலாம்.

Vijay Thalapathy Vijay TVK Tamil Cinema Vijay Politics Bhagavathi Kaththi Mersal Sarkar

காதல் ஹீரோவிலிருந்து மாஸ் ஹீரோ

பகவதிக்கு பிறகு விஜய்யின் திரைமொழி மெதுவாக மாறத் தொடங்கியது. திருமலை, கில்லி போன்ற படங்கள் முழுக்க அரசியல் படங்கள் அல்ல. ஆனால் அவற்றிலும் ஒரு பொதுவான விஷயம் இருந்தது - "நம்ம ஆளுக்கு பிரச்சனை வந்தா ஓட மாட்டான், நேராக எதிர்த்து நிற்பான்" என்ற உடல் மொழி. கில்லியில் அது காதலியை காப்பாற்றும் ஹீரோவாக வந்தது. திருப்பாச்சி, சிவகாசியில் அது குடும்பத்திற்காக உயிரை பணயம் வைக்கும் அண்ணன், தம்பி, மகன் என்ற வடிவம் எடுத்தது.

இந்த காலகட்டம் விஜய்க்கு முக்கியமானது. ஏனெனில், ரசிகர்கள் அவரை "அழகாக பாடல் பாடும் ஹீரோ"வாக மட்டும் அல்லாமல், "நம்ம பிரச்சனைக்கு முன் நிற்கும் ஆள்" என்று பார்க்க ஆரம்பித்தது இதே காலம். அந்த நம்பிக்கைதான் பிறகு அரசியல் கோஷங்களுக்கும் அடித்தளம் அமைத்தது.

Vijay Thalapathy Vijay TVK Tamil Cinema Vijay Politics Bhagavathi Kaththi Mersal Sarkar

திரையில் நேரடியாக அரசியல் நிழல்

விஜய்யின் படங்களில் அரசியல் வாசனை தெளிவாகப் பெருகத் தொடங்கிய காலம் தலைவாக்குப் பிறகு. தலைவா முழுக்க அரசியல் படம் இல்லை என்றாலும், "ஒரு மனிதன் தன்னுடைய விருப்பமின்றி பொதுமக்களின் தலைவராக தள்ளப்படுகிறான்" என்ற லைன் இருந்தது. ரசிகர்கள் அந்தப் படத்தை வெறும் கதை என பார்க்கவில்லை; "விஜய் லீடர்ஷிப் இமேஜ்"க்கு ரெடியாகிறார் என்ற முன்னோட்டமாகப் பார்த்தார்கள்.

ஆனால் உண்மையான திருப்பம் கத்தி. இந்தப் படம் விஜய்யின் திரை அரசியலை நேரடியாக மக்கள் பிரச்சனைகளோடு இணைத்தது. விவசாய நிலம், தண்ணீர், கார்ப்பரேட் பேராசை, கிராம மக்களின் உயிர் என இவை எல்லாம் மாஸ் காட்சிகளுக்குள் கொண்டு வரப்பட்ட விதம் சாதாரண விஷயம் அல்ல.

"ஒரு கமெர்ஷியல் ஹீரோ விவசாயம் பற்றி பேசினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?" என்ற கேள்விக்கு கத்தி பதில் சொன்னது. அதற்குப் பிறகு விஜய் படங்களில் சமூக கோபம் ஒரு ஸ்டைலாக மட்டும் இல்லாமல், பிராண்ட் ஆக மாறிவிட்டது.

அரசியல் கேள்வியாக மாறிய மெர்சல்

மெர்சல் படம் விஜய்யின் சினிமா-அரசியல் இணைப்பை இன்னும் ஒரு படி முன்னேற்றியது. மருத்துவத் துறையின் வணிகமயமாதல், ஜிஎஸ்டி, சுகாதார அமைப்பின் குறைகள் என இவை எல்லாம் கமெர்ஷியல் சினிமாவில் இவ்வளவு நேராக பேசப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் விஜய் அந்த வசனங்களை பேசினார். அந்த வசனங்கள் தியேட்டரில் கைதட்டலாக முடிந்துவிடவில்லை; வெளியே அரசியல் விவாதமாக மாறின. ஒரு நடிகர் பேசிய டயலாக், ஒரு அரசியல் கேள்வியாக மாறிய இடம் அதுதான்.

Vijay Thalapathy Vijay TVK Tamil Cinema Vijay Politics Bhagavathi Kaththi Mersal Sarkar

வாக்குரிமை பேசும் முகமாக சர்க்கார்

விஜய்யின் அரசியல் அடையாளத்துக்கு மிக நேரடியாக உதவிய படம் என்றால் அது சர்கார். இதில் அவர் ஒரு சாதாரண ஹீரோ அல்ல; தன் வாக்குரிமை திருடப்பட்டதால் அமைப்பையே எதிர்க்கும் குடிமகன். அந்தக் கோபம், அந்த உரிமை உணர்வு, "என் ஓட்டு எனக்கு வேண்டும்" என்ற கோஷம் என இவை அனைத்தும் ஒரு தேர்தல் மேடையில் பேசக்கூடிய அளவுக்கு நேரடியான அரசியல் மொழி கொண்டவை.

அந்தப் படத்தில் இருந்த பல விஷயங்கள் ரசிகர்களுக்கு ஒரு தெளிவான சிக்னல் கொடுத்தன: விஜய் இனி வெறும் மாஸ் ஹீரோவாக மட்டும் இருக்க மாட்டார்; அரசியல் கருத்தை திரை வழியாக சொல்லத் தொடங்கிவிட்டார். சர்கார் வெளியான பிறகு விஜய்யின் அரசியல் வருகை பற்றிய பேச்சு ஏன் இன்னும் அதிகரித்தது என்பதற்கு இதுவே காரணம்.

இளைஞர்களுக்கு பாடமான மாஸ்டர்

மாஸ்டர் படத்தில் விஜய் ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்தாலும், கதை முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் அமைப்புகள், போதை பொருள் பழக்கம், அதிகாரத்தின் தவறான பயன்பாடு ஆகியவற்றை சுற்றியே நகர்ந்தது. இந்தப் படம் "விஜய் = மக்கள் பிரச்சனை பேசும் ஹீரோ" என்ற கோட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. அதற்குப் பிறகு அவர் திரையில் பேசும் ஒவ்வொரு வரியையும் ரசிகர்கள் அரசியல் கோணத்தில் வாசிக்கத் தொடங்கினர்.

Vijay Thalapathy Vijay TVK Tamil Cinema Vijay Politics Bhagavathi Kaththi Mersal Sarkar

அரசியலுக்கான ரிஹர்சல்

இதற்கு ஒரு எளிய காரணம் இருக்கிறது. விஜய்யின் படங்களில் தொடர்ந்து வந்த மூன்று முக்கியமான அம்சங்கள்:

1- அதிகார திமிருக்கு எதிராக நிற்கும் சாதாரண மனிதன்
2- ஏழை, புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் சாயும் கதாநாயகன்
3- அமைப்பு தோல்வியடைந்தால் நேராக களம் இறங்கும் எதிர்ப்பின் மொழி

பகவதியில் குடும்பத்தை காப்பாற்றியவர், கத்தியில் விவசாயியை காப்பாற்றினார். மெர்சல்ல் நோயாளியின் உரிமையைப் பேசினார். சர்கார்ல் வாக்குரிமைக்காக சண்டை போட்டார். மாஸ்டர்ல் இளைஞர்களின் வாழ்க்கை பற்றி குரல் கொடுத்தார். இதை ஒன்றாக வைத்து பார்த்தால், அது வெறும் திரைப்பட தேர்வு இல்லை; "மக்கள் பக்கம் நிற்கும்" ஒரு நீண்டகால திரை கட்டமைப்பு.

திரை இமேஜ் To அரசியல் மேடை

பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் விஜய்யைப் போல முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட ஒரு திரை-அரசியல் பாலம் கிடைக்கவில்லை. விஜய்யின் மிகப்பெரிய பலம் அதுதான். அவர் அரசியலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கதாபாத்திரம் ஏற்க வேண்டியதில்லை. ரசிகர்கள் ஏற்கனவே அவரை அப்படித்தான் பார்த்துவிட்டார்கள்.

மொத்தத்தில், விஜய்யின் அரசியல் பயணத்தை ஒரு தேர்தல் வெற்றியால் மட்டும் அளக்க முடியாது. அது பல வருடங்களாக திரையில் மெதுவாக எழுதப்பட்ட கதை. காதல் நாயகனாக தொடங்கியவர், குடும்பத்துக்காக சண்டை போடும் மனிதராக மாறினார். அங்கிருந்து சமூக அநீதிக்கு எதிராக பேசும் ஹீரோவாக வளர்ந்தார். இறுதியில், திரையில் மக்களுக்காக குரல் கொடுத்த அந்த ஹீரோ, நிஜ வாழ்க்கையிலும் அதே இடத்துக்கு நடந்து வந்தார்.

ஏனெனில் விஜய்யின் அரசியல் அறிக்கையின் முதல் வரைவு... சட்டசபை மேடையில் எழுதப்படவில்லை. அது வெள்ளித்திரையில், கைதட்டல்களுக்கும் விசில்களுக்கும் நடுவே, பல வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+