சென்னையில் பயங்கரம்.. +2 மாணவர் அடித்து கொலை! பள்ளி அருகே திக்திக் சம்பவம்
சென்னை: திருவொற்றியூரில் அரசு பள்ளி அருகே 12ஆம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளி வளாகத்திற்கு அருகே பள்ளி மாணவரின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. இப்போதும் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு பள்ளியில் +2 படித்து வந்த மாணவர், பள்ளியின் பின்புறம் உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளி வளாகத்திற்கு அருகிலேயே மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர் +2 படிக்கும் தனுஷ் என தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்னாள் மாணவர்கள் சிலர் தனுஷை தாக்கியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவரின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரை தாக்கியதாக கூறப்படும் முன்னாள் மாணவர்கள் யார், கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தான் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்ற மூன்றாம் ஆண்டு மாணவர் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டார். அந்த அதிர்ச்சி நடந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில், சென்னையிலும் பள்ளி அருகே +2 மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
