அப்போ எடப்பாடி, இப்போ ஸ்டாலின்! அய்யா 12th பாஸ் பண்ணி விடுங்க.. முதல்வரிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பள்ளி மாணவர்கள் தங்களை தேர்ச்சி செய்யும்படி வித்தியாசமான கோரிக்கை வைத்தனர். இது எங்கு நடந்தது, இப்படி கோரிக்கை வைத்தது யார் எனப் பார்க்கலாம்.
Recommended Video
சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரசை அமெரிக்கா முதல் எந்தவொரு நாட்டினாலும் இன்னும் முழுமையாக அழிக்க முடியவில்லை.
அதிலும் இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால் இதைச் சமாளிப்பது அனைத்து நாடுகளுக்கும் பெரும் தலைவலியாகவே உள்ளது.

கொரோனா
முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது என்றால், அதன் பின்னர் ஆல்பா, டெல்டா, இப்போது ஓமிக்ரான் கொரோனா அடுத்தடுத்த கொரோனா அலைகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது பள்ளி மாணவர்கள் தான், கடந்த 2020 மார்ச் மாதம் முதலே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

பள்ளிகள்
இடையில் சில காலம் பள்ளிகள் தொடங்கப்பட்ட போதிலும் மீண்டும் டெல்டா பரவலால் அவை மூடப்பட்டன. இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் குறைந்ததால் கடந்த செப். முதல் படிப்படியாகப் பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தற்போது ஓமிக்ரான் பரவல் மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மீண்டும் ஆன்லைன் வாயிலாகப் பள்ளிகள் நடைபெற்று வருகிறது.

ஆல் பாஸ்
ஏற்கனவே கடந்த கல்வியாண்டு கொரோனாவால் முழுவதுமாக நடைபெறாமல் போனது. இதனால் கடந்த ஆண்டு முதலில் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து +2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு விகிதாச்சார முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் அதேபோல வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டும் பொது தேர்வு நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த முறை
அதேநேரம் +2 மாணவர்களுக்குக் கட்டாயம் பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் தேர்வை நடத்தாமல் பாஸ் செய்வது மாணவர்களின் கல்லூரி வாழ்க்கைக்கு பெரும் சிக்கலைத் தரும் என்பதால் +2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வைக் கட்டாயம் அரசு நடத்த வேண்டும் எனக் கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். +2 மதிப்பெண்களை வைத்தே மாணவர்கள் கல்லூரிக்குச் சேர முடியும் என்பதால் கல்வியாளர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இருப்பினும், ஒரு சில மாணவர்கள் இந்த ஆண்டும் +2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கையிலேயே உள்ளனர்.

வைரல்
இந்நிலையில், இது தொடர்பாக சில மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிய போது, சாலையில் இருந்த சில +2 மாணவர்கள், "ஐயா.. 12th மட்டும் பாஸ் பண்ணி விட்டுடுங்க ஐயா" என்று கத்தி கோரிக்கை வைத்தனர். இதற்கு முதல்வரும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும் அவரிடம் சில கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வு தொடர்பாக இதுபோல கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications