விடை பெறும் சட்டசபை, தலைமை செயலகம்.. முடிவுக்கு வரும் புனித ஜார்ஜ் கோட்டை.. முதல்வர் அறிவிக்கிறார்
சென்னை: சட்டசபை மாற்றம் குறித்த அறிவிப்பு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் சொல்கின்றன. புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை, தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்க உள்ளாராம். விவாதமின்றி ஒரு முடிவை சட்டமன்றத்தில் அறிவிக்க வழிவகை செய்யும் வகையிலான 'விதி 110'-ன் கீழ் இந்த அறிவிப்பு வரப்போகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை நெருக்கடி கருதி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று விரும்பினார் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதன்படி சென்னை அண்ணா சாலையில் அரசினர் தோட்டத்தில் மிகப்பிரமாண்டமாகத் தலைமைச் செயலகம் கட்டப்பட்டு 2010-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அந்த கட்டுமானத்தை அப்படியே மருத்துவமனையாக மாற்றி உத்தரவிட்டார். இப்போது அது உயர்தர அரசு மருத்துவமனையாகத் திகழ்கிறது. வழக்கம் போல் தலைமைச் செயலகம், சட்டசபை போன்றவை கோட்டையில்தான் இயங்கி வருகின்றன.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைச் செயலகத்தை மாற்றுவது குறித்து மீண்டும் தமிழக அரசு பரிசீலித்து வந்தது. விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. இதற்கான அறிவிப்பு இந்தச் சட்டசபை கூட்டத்தொடரிலேயே விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட உள்ளது.
இடமாற்றத்திற்காகத் த.வெ.க. அரசு மூன்று இடங்களைப் பட்டியலிட்டுள்ளது: கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினப்பாக்கம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள இடம். கிண்டியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 35 ஏக்கர் நிலமும், மற்ற இரு இடங்களில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களும் உள்ளன. இது ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் வாகன நிறுத்த வசதிகளுக்குப் போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் முதல்வர் விஜய்யிடம் கூறியிருக்கிறார்களாம்.
வரும் வாரங்களில் நடைபெறும் விவாதங்களுக்குப் பிறகே இறுதியான இடம் குறித்த முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உத்தரவின் பேரில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்கள். முதல்வர் விஜய் எங்கு சம்மதம் தெரிவிக்கிறாரோ அங்கு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டை புனித ஜார்ஜ் கட்டிடம், நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் வருகையினாலும், விரிவடைந்து வரும் அரசுத் திட்டங்களினாலும் இடநெருக்கடியால் திணறி வருகிறது. இந்த பிரதான பாரம்பரியக் கட்டிடத்தில் சட்டமன்றம் மற்றும் முதலமைச்சர், அமைச்சர்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் அலுவலகங்கள் தற்போது கேரேஜ் பிளாக்கில் இயங்கி வருகின்றன.
கோட்டை புனித ஜார்ஜில் போதிய இடவசதி இல்லை எனத் தலைமைச் செயலக ஊழியர்கள் நீண்டகாலமாகப் புகார் கூறி வந்தபோதிலும், முந்தைய அரசு இடமாற்றத் திட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. தற்போதைய த.வெ.க அரசு, முதலமைச்சரின் அறையைப் பிரதான கட்டிடத்தில் இருந்து நிர்வாகக் கட்டிடமான நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. "முதலமைச்சரும் அவரது செயலாளர்களும் டிசம்பர் 15-க்குள் புதிய அலுவலகத்திற்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பிரதான கட்டிடத்தில் மாற்றங்களைச் செய்ய அரசால் முடியவில்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜே. ஜெயலலிதா, 2003-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அருகே பெரிய அளவிலான சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக வளாகத்திற்கான பூமி பூஜையை நடத்தினார். ஆனால், அந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் புதிய வளாகத்தைக் கட்டி, 2010-இல் சட்டமன்றத்தை அங்கு மாற்றினார். 2011-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அக்கட்டிடத்தைப் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாக மாற்றி, சட்டமன்றத்தையும் தலைமைச் செயலகத்தையும் மீண்டும் கோட்டை புனித ஜார்ஜிற்கே கொண்டு வந்தார்.


Click it and Unblock the Notifications
