எம்எல்ஏக்களை சந்திக்கும் முன்.. அவசர அவசரமாக டிஜிபி, உளவுத்துறை ஐஜியை சந்தித்த விஜய்.. பேசியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை அன்று ஒரே நாளில் 13 படுகொலைகளும், அடுத்த 48 மணி நேரத்தில் 17 உயிரிழப்புகளும் பதிவான விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் மதுபோதையில் தகராறு செய்தவர்களைத் தட்டிக்கேட்ட தேனி சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் நடுரோட்டில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், காவல்துறையினரின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதன் எதிரொலியாக, மாநில சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டிருப்பதால், தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

vijay tvk

இந்த இக்கட்டான அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலில், தமிழக காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் என்ன நடந்தது?

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அவசரக் கூட்டத்தில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க், தலைமைச் செயலாளர் சாய் குமார், உள்துறைச் செயலாளர் கார்த்திக், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டி.எஸ். அன்பு மற்றும் சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் அண்மையில் அரங்கேறிய தொடர் கொலைகள், குறிப்பாக தீபாவளி பண்டிகை தினத்தில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் பழிவாங்கும் தாக்குதல்கள் குறித்து உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் விரிவான தகவல்களை முதலமைச்சரிடம் விளக்கினார். பெரும்பாலான குற்றங்கள் மது மற்றும் போதைப்பொருட்களின் தாக்கத்தால் ஏற்பட்ட உடனடி மோதல்களாலும், உள்ளூர் ரவுடிகளுக்கு இடையே நிலவி வந்த பழைய பகையாலும் நடந்துள்ளன என்பதை காவல் அதிகாரிகள் புள்ளிவிவரங்களுடன் முன்வைத்தனர்.

அதே நேரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான கொலை வழக்குகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, குற்றங்களைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விஜய் பிறப்பித்த 5 முக்கிய உத்தரவுகள்

கூட்டத்தில் காவல் அதிகாரிகளின் விளக்கங்களைக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

தெருக்களில் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்து விதமான போதைப்பொருள் புழக்கத்தையும் வேரறுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு மது மற்றும் போதையே முக்கிய காரணியாக இருப்பதால், இதைக் கையாளும் நெட்வொர்க்குகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

நிலுவையில் பல வழக்குகள் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து, சந்தேகப்படும் நபர்களை உடனடியாக முன்னெச்சரிக்கைக் காவலில் அடைக்க வேண்டும்.

முக்கிய நகரங்கள், கிராமப்புற சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணிகளை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும்.

பண்டிகை காலங்கள் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதா என்பதை உள்ளூர் உளவுத்துறை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சட்டத்தை நிலைநாட்டும் காவல்துறையினர் மீது கைவைக்கும் ரவுடிகள் மற்றும் வன்முறைக் கும்பல் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டத்தின் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

அரசியல் அழுத்தம்?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், "காவல்துறைக்கே பாதுகாப்பில்லை, சட்டம் - ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது" என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மறுபுறம், ஆளுநர் வழியாக மத்திய அரசு அறிக்கை கோரியிருப்பது அரசுக்கு இரட்டை அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

களத்தில் உடனடியாக உறுதியான மாற்றத்தைக் காட்டாவிட்டால் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடையும் என்பதை உணர்ந்தே முதல்வர் விஜய் இந்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் முடுக்கிவிடப்பட்டுள்ள இந்த அதிரடி தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+