பெரிய தவறு! விஜய்யின் புதிய CM ஆபிஸ் விதிமீறல்.. இந்த கேள்விக்கு மட்டும் பதிலே வர மாட்டேங்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமையவுள்ள முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலகப் பணிகள் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் இணைய டெண்டர் தாமதமாக விடப்பட்டது என்ற கேள்விக்கு மட்டும் அரசு தரப்பில் இருந்து இதுவரை பதில் அளிக்கப்படாமல் உள்ளது.

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை காக்கப்படும் என்ற தமிழக வெற்றிக் கழக அரசின் வாக்குறுதிக்கு மாறாக பல விஷயங்கள் தற்போது கோட்டையில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமையவுள்ள முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலகப் பணிகளுக்கான ₹5.54 கோடி மதிப்பிலான டெண்டரில் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

CM Vijay office tender

முதலாவதாக, இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்காகக் கோரப்பட்ட மூன்று டெண்டர்களில் ஒன்று கூட தொடக்கத்தில் இணையதளத்தில் (e-tender) வெளியிடப்படவில்லை. இரண்டாவதாக, டெண்டர் நடைமுறைகள் முறைப்படி தொடங்குவதற்கு முன்பாகவே, 10-வது தளத்தில் இருந்த பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றும் பணிகள் மற்றும் பிற ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. இது டெண்டர் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பே ஒப்பந்ததாரர் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டாரா என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவதாக, இந்த டெண்டர் அறிவிப்பு நாளிதழ்களில் அச்சிடப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகே இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. அதுவும், இ-டெண்டர் ஏன் இணையத்தில் வெளியிடப்படவில்லை என்பது குறித்து ஊடகத் தரப்பிலிருந்து அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்ட பிறகே அவசரமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டது.

நான்காவதாக, நாளிதழ்களில் வெளியான விளம்பரத்திற்கும் ஆன்லைன் டெண்டர் ஆவணங்களுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. நாளிதழ் விளம்பரத்தில் திட்டத்தின் மதிப்பு ₹5.54 கோடி என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஆவணத்தில் திட்ட மதிப்பீட்டுத் தொகை குறிப்பிடப்படாமல் வெறுமனே "NA" (Not Available) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

CM Vijay office tender

பொதுப்பணித்துறையின் கட்டடங்கள் பிரிவு, இந்த டெண்டருக்கான அறிவிப்பை ஆகஸ்ட் 12 மற்றும் ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் நாளிதழ்களில் வெளியிட்டது. அதில் ஒப்பந்ததாரர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலகட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 135 பிற டெண்டர்கள் முறையாக இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட போதிலும், முதலமைச்சர் அலுவலகத்திற்கான இந்த 3 டெண்டர்கள் மட்டும் இணையத்தில் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நான்கு நாட்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை காலை 9:30 மணியளவில் பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆர். செல்வராஜிடம் இந்த விவகாரம் குறித்து ஊடகத்தின் கேள்வி எழுப்பியபோது, "உடனடியாக அது இணையத்தில் பதிவேற்றப்படும்" என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அன்றைய தினமே காலை 10:00 மணிக்கு அந்த டெண்டர் இணையதளத்தில் அவசரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டது.

வெளியிடப்பட்டுள்ள டெண்டர் ஆவணங்களின்படி, முதலமைச்சர் அலுவலகத்திற்காக இரட்டை அடுக்கு தீ தடுப்புக் கதவுகள், 90 மி.மீ தடிமன் கொண்ட பிளைவுட் தடுப்புச் சுவர்கள், ஃபுல்-பாடி டைல்ஸ், ஸ்வான்-நெக் குழாய்கள், பிரத்யேக கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இந்த ஒட்டுமொத்த பணிகளையும் மூன்று மாத காலத்திற்குள் ஒப்பந்ததாரர் முடிக்க வேண்டும் என்றும், பணிகளில் ஏற்படும் காலதாமதம் மற்றும் பிற விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் டெண்டரில் ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடோ அல்லது ஒவ்வொரு கட்டுமானப் பொருளுக்கான தனித்தனி விலையோ குறிப்பிடப்படவில்லை.

டெண்டர் ஆவணங்களின் வடிவம் முந்தைய ஆட்சிகளின் முறையையே பின்பற்றி அமைந்திருந்தாலும், இணையதளத்தில் திட்டச் செலவு குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒப்பந்ததாரர்கள் சரியானமுறையில் ஏலம் எடுக்க ஏதுவாக, திட்டத்தின் மொத்த மதிப்பீடும், ஒவ்வொரு பணிக்கான உத்தேச செலவும் இணையதளத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை.

அரசு விதிகளின்படி ₹50 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்பிலான அனைத்து பணிகளுக்கான டெண்டர்களும் மாவட்ட அரசிதழ், நாளிதழ்கள் மற்றும் தமிழ்நாடு டெண்டர் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்; திட்ட மதிப்பீடு மற்றும் பணி வரம்புகள் ஆவணங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் பரிசீலித்து விலைப் புள்ளிகளை வழங்கக் குறைந்தபட்சம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் இங்கு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனிடையே, டெண்டர் நடைமுறைகள் முடிவதற்கு முன்பாகவே அங்கு ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன என்ற குற்றச்சாட்டைப் பொதுப்பணித்துறைச் வட்டாரத்தானர் முழுமையாக மறுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+