"முதல்வர் விஜய்க்கு தூக்கம் வரல.. எங்களை பார்க்கும் போதெல்லாம் சொல்வார்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை: "நீங்கள் இங்கு இருக்கும்போது எங்கள் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை. ஒவ்வொரு முறை எங்களைப் பார்க்கும்போதும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுவார். இங்கு போராட்டத்தில் ஈடுபடும் யார் மீதும் கை வைக்கவோ, மிரட்டவோ கூடாது என முதல்வர் கூறியிருக்கிறார்." என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் விஜய்யிடம் நேரடியா வழங்குவதற்கு நேரம் ஒதுக்கக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக போராடும் தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் பேசினர்.
அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு தேவையானதை செய்து தருவோம். கடந்த ஆட்சிகளில் போராட்டம் பண்ண விடமாட்டார்கள். இரவோடு இரவாக தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
நம் முதல்வர் கண்டிப்பாக உங்களுக்கு தேவையானதை செய்வார். நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல்வர் வருத்தப்பட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம், இது உங்கள் ஆட்சி. எப்போது வேண்டுமானால் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். எங்கள் அலுவலக கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும், அதுதான் எங்கள் கோரிக்கை.
நீங்கள் இங்கு இருக்கும்போது எங்களுக்கு தூக்கம் வருவதில்லை, குறிப்பாக எங்கள் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை. ஒவ்வொரு முறை எங்களைப் பார்க்கும்போதும் எதாவது செய்ய வேண்டும் என்று கூறுவார். இங்கு போராட்டத்தில் ஈடுபடும் யார் மீதும் கை வைக்கவோ, மிரட்டவோ கூடாது என முதல்வர் கூறியிருக்கிறார்.
போராடும் ஒருவர் மீதுகூட கை வைக்கக் கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தோம். கடந்த ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள். இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறோம். அவுட் சோர்சிங் என எல்லாவற்றிலும் ஊழல் செய்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
