17 நாட்களுக்கு பின் நிம்மதி.. சுரங்க தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சென்னை: 17 நாட்களுக்கு பிறகு உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்தவர்கள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தனர். மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 17 நாட்களாக இவர்களை மீட்க தொடர் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டிருந்தனர். தொடர் முயற்சி காரணமாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்க முடிந்திருக்கிறது. இது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனாலும், அவர்கள் உள்ளே சிக்கி 17 நாட்கள் ஆகிவிட்டதால் தீவிர மனசோர்வுக்கு ஆட்பட்டிருந்தார்கள். எனவே மீட்பு பணியை துரிதப்படுத்தி அவர்களை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தது.
ஆனால் இதில் சில சிக்கல்கள் இருந்தன. அதாவது, சுரங்கத்தின் வாயிற் பகுதியில் நுழைந்து தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மைதான். மற்ற மலை பகுதியில் இருக்கும் பாறைகளை போல உத்தரகாண்ட் மற்றும் இயமலையை ஒட்டியுள்ள மலையின் பாறைகள் கடினமானவை கிடையாது. இந்த பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது.
Relieved to hear that all 41 workers trapped in the #Uttarkashi tunnel collapse have been successfully rescued after 17 challenging days.
— M.K.Stalin (@mkstalin) November 28, 2023
Heartfelt gratitude to the brave rescue teams and rat-hole miners for their relentless efforts in the #Silkyara tunnel rescue.
Wishing…
எனவே நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும்போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்து துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க போராடினர். இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. தற்போது 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடைசி கட்டத்தில் எந்திரங்களால் முடியாத வேலையை எலி வளை சுரங்க தொழிலாளர்கள், வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். 41 பேரும் பத்திரமாக மீட்க இது முக்கியமான காரணமாகும். இப்படி இருக்கையில் மீட்பு குழுவினரின் முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இது குறித்து x சோஷியல் மீடியா பக்கத்தில், "உத்தரகாசி சுரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. மீட்பு பணியில் அயராமல் துணிச்சலான முயற்சிகள் மேற்கொண்ட மீட்பு குழுவினருக்கும், எலி துளை சுரங்க தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். துணிச்சலான 41 தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications