ஆளுநருக்கு மீண்டும் செக்!.. நீட் தேர்வு விலக்குகாக ஸ்டாலின் எடுக்கும் அடுத்த அதிரடி
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்தால் நீட் தேர்வில் விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது." என கூறியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தை அதிமுக, பாஜக கட்சிகள் புறக்கணித்திருந்தன. காங்கிரஸ், மதிமுக, பாமக, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, "உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்தால் நீட் தேர்வில் விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மாணவர்களின் கல்வியை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருகிறது. பொதுவாக நுழைவு தேர்வு விளிம்பு நிலை மாணவர்களை பாதிக்க செய்கிறது.
பள்ளி கல்வி மதிப்பெண் அடிப்படையில் செல்ல வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி மாநில அளவில் நடைபெற்று வந்த நுழைவுத் தேர்வுகளை கடந்த 2006 ஆம் ஆண்டு தனி சட்டம் இயற்றி அகற்றினார். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று, கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏழை, எளிய மாணவர்களின் வாய்ப்பை உறுதி செய்தார்.
இதனடிப்படையில் தான் தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற நம்முடைய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த மருத்துவர்களால் தான் மருத்துவத்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு முன் உதாரணமாக விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு நீட் தேர்வு திருத்த சட்டம், தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவை மூலம் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை கொண்டு வந்தது.
இது மாணவர்களை வெகுவாக பாதிக்கிறது. மாநில அரசுகளால் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்கிற உரிமையை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு பறித்தது. நுழைவுத் தேர்வு என்பது வசதி வாய்ப்பு இருப்போருக்கு மட்டுமே சாதகமாக இருப்பதுதான் நீட் தேர்வின் அநீதி. இதற்கு எதிராக மக்கள் மன்றத்தில் நாம் போராடினோம். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் சட்ட போராட்டத்தில் இறங்கினோம்.
ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வில் சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து அறிக்கை வழங்க, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தோம். சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு பெரும் கனவுக்கு பெரும் இடையூறாகவும், சமூக பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் நீட் தேர்வு இருப்பதாக குழு தெரிவித்தது.
எனவே 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான ஒரு சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற இந்த குழு பரிந்துரை செய்தது. இந்த விரிவான பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்ட அரசு செயலாளர்கள் குழு, நீட் விலக்கு சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது.
அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை 13.9.2021 நான் முன் மொழிந்தேன். அந்த சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பினோம். அந்த சட்ட முன் வடிவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் தன்னுடைய அரசியல் சட்ட கடமைகளை செய்யாமல், அரசியல் செய்ய தொடங்கினார் என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்.
நாமும் சளைக்காமல் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெற கடுமையான சட்டப் போராட்டம் நடத்தினோம். இந்நிலையில் அதை ஆளுநர் திருப்பி அனுப்பினார். 5.2.2022 தேதியில் இதே மாதிரியான சட்டமன்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். அதில் சட்ட முன் வடிவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதன் பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் இந்த சட்ட முன் வடிவு 8.2.2022 மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து நினைவுபடுத்தினேன். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தும் இந்த சட்ட முன் மொழிவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வலியுறுத்தினேன்.
அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று மனு அளித்தனர். இந்த தொடர் முயற்சிகளுக்கு பலனாக நாம் நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நீட் விலக்கு சட்ட முன் மொழிவை ஒன்றிய உள்துறை அலுவலகத்துக்கு ஆளுநர் அனுப்பினார் என்ற செய்தியை 4.5.2022 சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.
நீட் தேர்வு விலக்கு போராட்டத்தின் அடுத்தகட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த சட்ட முன் வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து ஒன்றிய அரசு சுகாதாரத்துறை, ஆயுஷ், உள்துறை, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கு தமிழ்நாடு அரசின் செயல் விளக்கங்களை அனுப்பினோம்.
இதை எல்லாம் ஏற்காமல் ஒன்றிய அரசு மாணவர்களுக்கு பெரும் பேரிடியாய் நம்முடைய நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஏற்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் என்பதை சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் வேதனையுடன் அறிவித்தேன். ஒன்றிய அரசு நம் கோரிக்கையை நிராகரித்திருக்கலாம். ஆனால் நீட் தேர்வை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் ஓய்ந்துவிடவில்லை.
இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக கலந்தாலோசிப்போம் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து, சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தேன். அந்த வகையில் இந்தப் பிரச்னையில் நாம் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நீட் தேர்வு என்பது யாரோ தங்களின் சுய நலத்துக்காக ஒன்றிய அரசை தவறாக வழிநடத்தி நடத்தும் தேர்வு. அதையும் முறையாக நடத்தவில்லை என்பது குறித்து பல்வேறு மாநிலங்களில் சிபிஐ வழக்குகளின் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று உச்ச நீதிமன்றதில் வெளியான தீர்ப்பு நம்பிக்கை கொடுத்துள்ளது. சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications