முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்.. பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்! கோரிக்கை மனு அளிப்பார்
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை அழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, டெல்லிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், தமிழக எம்பிக்கள் குழுவினர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினர்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடி தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று, பிரதமர் மோடி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த சூழலில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆகியோரை முதல்வர் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் மாலையில், பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக பிரதமர் சென்னை வந்ததற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழகத்திற்கான, கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 17ம் தேதி இரவு 8.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications