காரம் கம்மியா மீன் குழம்பு அவருக்கு ரொம்ப பிடிக்கும்..துர்கா ஸ்டாலின் கை பக்குவம்..செம கிச்சன் டூர்
தமிழக முதல்வர் துர்கா ஸ்டாலின் மீன் குழம்பு சமைப்பதில் எக்ஸ்பர்ட். அதுவும் காரம் குறைவாக போட்டு எண்ணெய் கம்மியாக சேர்த்து மண் பாத்திரத்தில் சமைப்பாராம்.
சென்னை: என்னதான் நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டிற்கு மனைவியாக, அம்மாவாக, மகளாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் மனைவியும் அதற்கு விதி விலக்கு அல்ல. தன்னுடைய சமையல் அறையில் தன் கையால் மணக்க மணக்க மீன் குழம்பு சமைத்து பரிமாறினால் அவர் திருப்தியாக சாப்பிடுவார் என்று கூறியுள்ளார் துர்கா ஸ்டாலின்.
விஐபி வீட்டு கிச்சன் அறை நிறைய அலங்காரங்களுடன் பந்தாவாக இருக்கும். முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிலும் இரண்டு கிச்சன்கள் இருக்கின்றன. ஒன்று இன்றைய இளைய தலைமுறையினர் சமைக்கும் மாடர்ன் சமையல் அறை. மற்றொன்று எளிமையான அம்மி, சாதாராண பாத்திரங்கள், மண் பாத்திரங்கள் நிறைந்த எளிமையான சமையல் அறை.
முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சமைப்பது சாதாரண மண் பாத்திரத்தில்தான். குக்கர் எல்லாம் பயன்படுத்துவதில்லை. அலுமினிய பாத்திரங்களில் சாதம் வடித்து மண் பாத்திரங்களில் குழம்பு வைக்கிறார். நாயகி யூடியூப் சேனலுக்காக துர்கா ஸ்டாலின் வீட்டு சமையல் அறைக்குள் போய் துர்கா ஸ்டாலினிடம் பேட்டி எடுத்துள்ளார்கள்.

முதல்வர் ஸ்டாலின் வீடு
முதல்வரின் வீடு பிரம்மாண்டமாக இருக்கிறது. பூஜை அறையில் அற்புதமாக இறை வடிவங்களும் வீட்டு முன்னோர்களின் படங்களும் வைக்கப்பட்டிருக்க, பிரம்மாண்ட வெள்ளி விளக்குகள் சுடர் விட்டு பிரகாசிக்கின்றன. சமையல் அறையில் அவர்தான் ராணி. எளிமையாக இருக்கிறது. எனக்கு இதுதான் உபயோகிக்க எளிது என்கிறார். கூடவே அம்மியும் இருப்பதுதான் ஸ்பெஷல். ரசத்திற்கு நுணுக்க,துவையல் அறைக்க தேவை என்கிறார். அதிக விலை உயர்ந்த டப்பாக்கள் எல்லாம் இல்லை. சாதாரண பாத்திரங்கள்தான் சமையல் அறையில் உள்ளன.

என் சமையல் அறையில்
தன்னுடைய சமையல் அறையில் எல்லாமே சரியாக இருக்க வேண்டும் அதுதான் தனக்கு பிடிக்கும் என்று சொல்லும் அவர், வரிசைப்படி அடுக்கி வைக்கிறார். எனக்கு பில்டர் காபி பிடிக்கும் அவருக்கு டீ பிடிக்கும் காலை நேரத்தில் பெரும்பாலும் டீ தான் குடிப்பார். எப்போதாவது ஹார்லிக்ஸ் குடிப்பார் என்று சொல்கிறார் துர்கா. சர்க்கரையிலேயே பல வெரைட்டிகள் இருக்கின்றன. அதுவும் யார் யாருக்கு என்ன சர்க்கரை தேவையோ அதை சரியாக கலந்து கொடுப்பாராம். அஞ்சறைப்பெட்டியில் சமையலுக்கு தேவையான பொருட்கள் வைத்திருக்கின்றன. டீயில் போடுவதற்கு ஏலக்காய் பொடி செய்து வைத்துக்கொள்வோம். மிளகு சீரகமும் பொடி செய்து வைத்திருப்போம் என்று விவரிக்கிறார் துர்கா.

மூலிகை பொடி கசாயம்
கொரோனா காலத்திற்குப் பிறகு வீட்டில் மூலிகைபொடிகளும் வைத்திருக்கிறார். அவ்வப்போது சுடுதண்ணீரில் மூலிகை பொடி போட்டு குடிப்போம். காய்ச்சல், சளி வந்தால் நன்றாக கொதிக்க வைத்து கசாயம் குடிப்போம். வேண்டும் என்றால் இனிப்புக்கு பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். நானும் சாரும் இனிப்பு சேர்க்காமல் சும்மாவே குடிப்போம்..வேண்டாம் என்று சொல்பவர்களை கட்டாயப்படுத்த மாட்டேன் என்கிறார் துர்கா.

மீன் குழம்பு
அது தவிர நிறைய பொடிகள் தயாரித்து சிறு சிறு டப்பாவில் போட்டு வைத்திருக்கிறார். கொள்ளு உடம்புக்கு நல்லது நான் சேர்த்துக்கொள்வேன். பருப்பு பொடிகளுக்கு கொஞ்சம் நெய் சேர்த்துக்கொள்வேன் அப்பதான் நல்லா இருக்கும். தனது கணவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தன் கையால் பக்குவமாக பார்த்து பார்த்து சமைக்கிறார். அவருக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். எண்ணெயும், காரமும் குறைவாக சேர்த்து சமைத்து கொடுப்பேன் என்று கூறிய துர்கா ஸ்டாலின், வறுத்த மீன கேட்டால் அதை தாவாவில் போட்டு தருவோம் என்கிறார்.

மருமகள் பிரியாணி ஸ்பெஷல்
மருமகள் கையால் சமைத்த பிரியாணியை ஆசையாக சாப்பிடுவாராம் முதல்வர் ஸ்டாலின். சாப்பிட்டு விட்டு உடனே சூப்பரா இருந்தது என்று போனில் சொல்வாராம். மகள், மருமகள் எல்லாம் விதம் விதமாக சமைப்பார்கள். பேக்கரியில் செய்யக்கூடிய கேக் எல்லாம் வெரைட்டியாக சமைப்பார்கள் என்று பெருமையுடன் கூறினார். பாஸ்தா எல்லாம் அவங்க ஸ்டைலில் சமைப்பார்கள் எனக்கு அது எல்லாம் பிடிக்காது சாரும் சாப்பிடமாட்டார் என்று கூறிய துர்கா..சாம்பார், வத்தகுழம்பு, ரசம் வைத்து சோறு சாப்பிட்டால்தான் சாப்பிட்டது போல இருக்கும் என்று சொல்லி சிரிக்கிறார்.

கிச்சன் பற்றி எதுவும் தெரியாது
சாருக்கு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை பற்ற வைக்கக்கூட தெரியாது என்று சொல்லி விட்டு சிரித்தார். பையனும் அப்படித்தான், மாப்பிள்ளையும் அப்படித்தான் மூன்று பேருக்குமே கிச்சன் பற்றி எதுவுமே தெரியாது. கோபாலபுரத்து மருமகளாக வந்த போது அங்கே கேஸ் அடுப்புதான். ஆனால் அவ்வப்போது விறகு அடுப்பில் சமைத்த அனுபவம் உள்ளது என்று சொல்கிறார். திருமணம் முடிந்து வந்த பின்னர்தான் சமைக்க கற்றுக்கொண்டேன். அத்தை, மல்லிகா அண்ணி ஆகியோரிடம் கேட்டு சமைப்போம்.

மாமா கருணாநிதிக்கு பிடித்த உணவுகள்
மாமாவிற்கு மீன் குழம்பு பிடிக்கும் அதிலும் விரால் மீன் ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன துர்கா, மட்டன் கைமா உருண்டை குழம்பு பிடிக்கும், நாட்டுக்கோழி, என அசைவ உணவுதான் அதிகம் சாப்பிடுவார். சமைக்க ஆள் இருந்தாலும் காரம் குறைவாக போட்டு தனியாக சமைத்துக்கொடுப்போம் என்றும் தங்களின் சமையல் பக்குவத்தை பகிர்ந்து கொண்டார் துர்கா ஸ்டாலின். அதற்கு நேர்மாறாக அத்தை அசைவம் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிடாவிட்டாலும் அற்புதமாக அசைவ உணவுகள் செய்வார் அவரிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக்கொண்டோம் என்று அத்தைக்கு பிடித்த மருமகள்தான் என்று அன்போடு சொல்கிறார்.












Click it and Unblock the Notifications