கான்வாயை நிறுத்துங்க.. பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களிடம் குறை கேட்ட முதல்வர் ஸ்டாலின்
செங்கல்பட்டு: இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் கடப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார்.
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

6 மாத காலம்
இந்த திட்டத்தில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாத காலத்திற்கு தினமும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்டவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வழிகாட்டும் நெறிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

கான்வாய்
இந்த நிலையில் இந்த திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்றபோது கடப்பாக்கத்தில் உள்ள பெ கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியை பார்த்துவிட்டு தனது கான்வாயை நிறுத்துமாறு கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்
பின்னர் காரில் இருந்து இறங்கி உள்ளே சென்ற முதல்வர் நேராக வகுப்புகள் நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருகின்றனவா, பஸ் பாஸில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என கேட்டுள்ளார்.

தடுப்பூசி
இதையடுத்து வகுப்பெடுத்து வந்த ஆசிரிய, ஆசிரியைகளிடம் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இலவச பேருந்து பயணம் குறித்தும் கேட்ட முதல்வர் கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் எல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனரா என கேட்டறிந்தார்.

பள்ளிக்குள் பரபரப்பு
மேலும் அங்குள்ள சத்துணவு கூடத்தை பார்வையிட்ட முதல்வர் அங்கிருந்த பொருள்கள் சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்றும் சமையலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களை நன்கு படித்து பெரிய ஆளாக வேண்டும் என அறிவுரை வழங்கிய அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னறிவிப்பு ஏதுமின்றி திடுதிப்பென முதல்வர் பள்ளிக்குள் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் ஆய்வு
இது போல் தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள காவல் நிலையத்திற்கு இரவு நேரத்தில் திடீர் ஆய்வுக்கு சென்ற முதல்வர், அங்கு எஸ்ஐ நாற்காலியில் அமர்ந்து கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இதே போல் குற்றாலம் அருகே ஒரு அரசு பள்ளிக்கும் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அண்மையில் இரு தினங்களுக்கு முன்னர் ஈசிஆர் சாலையில் அரசு பேருந்தில் ஏறிய முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications