கொரோனாவால் இறக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு.. ஸ்டாலின் உத்தரவு
சென்னை: கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய் - கொரோனா நோய்த் தொற்றினால் இறப்பு ஏற்படின், இழப்பீட்டுத் தொகையை 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
அந்த ஆணையில் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு
சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.

அரசு
மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள்,
தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட
ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்)
ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

ஊடகவியலாளர்கள்
கடந்த ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த மாண்புமிகு முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

பத்திரிகை
அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

கோரிக்கை
இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications