ஒழுகும் வீட்டில் அப்பா இருக்காரு! மாணவி சொல்லி 24 மணி நேரம் கூட ஆகலை! புது வீடு ஒதுக்கிய ஸ்டாலின்
சென்னை: ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை இனி மாணவி பிரேமாவுக்கு வேண்டாம் என்றும் அவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் நிகழ்வில் மாணவி பிரேமா தனது ஒழுகும் வீடு குறித்து உருக்கமாக கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!

எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற தமிழகத்தின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் 'நான் முதல்வன், முதல்வரின் காலை உணவு திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன்' திட்ட பயனாளிகள், விளையாட்டு சாதனையாளர்கள், சிறப்பு குழந்தை சாதனையாளர்கள் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் அருகே கழுநீர் குளத்தில் ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பதாக மாணவி பிரேமா கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். மேலும் தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த அப்பாதான் தனக்கு எல்லாம் என கூறிய அந்த மாணவி, தனது முதல் மாத ஊதியத்தை தனது அப்பாவிடம் கொடுத்து மகிழ்ந்தார். அப்போது அந்த மாணவி கண்கலங்கினார்.
மேலும் அந்த மாணவி தந்தை, தமிழக அரசின் திட்டங்களால் ஏழை குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது என்றும் இதற்கு காரணமாக அமைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
அது போல் இந்த நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தில் படித்த பெண் தற்போது ஜப்பான் நாட்டில் வேலைக்கு பணியாணை பெற்றுள்ளாராம். இதை ஜப்பானிய மொழியிலேயே பேசி அசத்தினார். அது போல் இன்னொரு மாணவி, தனக்கு புதுமைப் பெண் திட்டத்தால் மாதம் ரூ 1000 கிடைத்ததை கொண்டு தனது தாய்க்கு காது கேட்கும் கருவியை வாங்கி பொருத்தியதாகவும் தாய், தந்தையை நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார். இதை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி அடைந்து ஆனந்த கண்ணீர் சிந்தினார்.












Click it and Unblock the Notifications