தென் முனையில் இருந்து வட முனைக்கு.. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக ஒமர் அப்துல்லா இன்று பொறுப்பேற்றார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் விருந்தினர்களாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி கனிமொழி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சென்னை பெருமழை எச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகள் காரணமாக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழியை அனுப்பி வைத்தார்.
அதோடு, ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதமும் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்" எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு ஒமர் அப்துல்லா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. பரூக் அப்துல்லா அவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான தங்கை கனிமொழி எம்.பி அவர்களை என் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.
இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!" எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications
