"BEST சாய்ஸ்".. சென்னை மேயராக இளம் பெண்ணை டிக் செய்த ஸ்டாலின்! 24 வயசா! இது லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: சென்னையின் அடுத்த மேயர் யார் என்பது இன்னும் புதிராக உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின்.. சென்னை மேயர் பதவிக்கு தகுதியான நபரை டிக் அடித்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதில் முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க போவதாகவும் தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 200 வார்டுகளில் 153 வார்டுகளில் தனியாக வென்று திமுக பெரும்பான்மை பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது. 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது.

ஒதுக்கீடு
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இதில் சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கணிப்புகளை விஞ்சி இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

லிஸ்ட்
இந்த நிலையில் சென்னைக்கு திமுக சார்பாக மேயர் ஆக போகும் அந்த நபர் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதனால் சென்னையின் முதல் பெண் மேயர் யார் என்பதுதான் திமுகவிலும் பொது மக்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. இந்த பதவியை கைப்பற்ற வி.வி.ஐ.பி.க்கள் பலரும் முட்டி மோதி வருகிறார்கள். தற்போது சென்னையில் வென்ற 153 பேரில் ஆண்கள் தவிர்த்து மீதம் உள்ள பெண்களில் தலித் பிரிவினரை மட்டும் கணக்கில் கொண்டால் 13 பேர் இருக்கிறார்கள். இந்த 13 பேரில் ஒரு பெண்ணுக்குத்தான் மேயர் பதவி கிடைக்கும்.

ரேஸில் 3 பேர்
இந்த ரேஸில் 3 பேர் முன்னிலையில் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. திமுக சார்பாக 159வது வார்டில் வெற்றபெற்ற மு.ஆ.நந்தினி, 100-வது வார்டில் வெற்றி பெற்ற வசந்தி பரமசிவம், 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியா ஆகியோருக்கு மேயர் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின். இந்த நிலையில், 74-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள ஆர்.பிரியாவை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் மகள்தான் ப்ரியா.

பிரியா மேயர்
பல ஆலோசனைகளை செய்துவிட்டு கடைசியில் இவரை மேயராக்க ஸ்டாலின் டிக் அடித்திருப்பதாக அறிவாலயத்தரப்பில் சொல்லப்படுகிறது. இவருக்கு வயது 24 தான் ஆகிறது. வட சென்னையின் திரு.வி.க. நகர் தொகுதிக்குள் அடங்கிய 74-வது வார்டில் இருந்து ப்ரியா கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு இவர் நெருக்கம் ஆனவர். அவர் மாவட்ட செயலராக உள்ள சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து இவர் வெற்றி பெற்றுள்ளார்.

துணை மேயர்
இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான சிற்றரசு துணை மேயர் பதவியை பெற வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் மார்ச் 1 முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடக்க உள்ளதால் இதற்கான தடபுடல் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனால் சில மாநகராட்சிகளில் இன்னும் மேயர் இறுதி செய்யப்படவில்லை. மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான முதல் கட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளன.

உதாரணமாக
திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது ஆதரவாளரான இல.பத்மநாதனை தேர்வு செய்து ஸ்டாலினிடம் பரிந்துரை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினும் இதை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் முன்னாள் மேயரும், இப்போதைய எம்.எல்.ஏ.வுமான செல்வராக் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்று கூறப்படுகிறது. இது போக இன்னும் சில மாவட்டங்களில் மேயர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications