கோவை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த விஜய் பாடல்! முகம் சுளித்த மாணவர்களின் பெற்றோர்
கோவை: கோவையில் நடைபெற்ற இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளில் தவெக கட்சி பாடல்களும், விஜய் நடித்த திரைப்பட பாடல்களும் ஒளிபரப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ (ESI) அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார், ESI மருத்துவ கல்லூரி முதல்வர் வீரமணி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
சுகாதாரத் துறை அமைச்சர் நிகழ்வில் பேசிவிட்டு வரும்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல் ஒளிபரப்பப்பட்டது.
இதே போல இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் , மருத்துவக் கல்லூரி டீன் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னரே முதல்வர் விஜய், நடிகராக இருந்த பொழுது நடித்த படங்களில் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பட்டமளிப்பு விழா துவங்கியது. மாணவர்கள் ஒவ்வொருவராகத் தங்களது பட்டங்களைப் பெற மேடை நோக்கி வரும்பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாடலின் இசை மிக உரத்த சப்தத்துடன் ஒலிக்கவிடப்பட்டது.
மேடையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையிலேயே, த.வெ.க கட்சிப் பாடலின் பின்னணி இசை இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
எங்கு பார்த்தாலும் நிகழ்வுகளில் விஜய் நடித்த பட பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. அதிலும் ஜனநாயகன் படத்தில் இடம் பெற்ற தளபதி கச்சேரி பாடல் இடம் பெறுகிறது. ஒரு முறை ஒரு நிகழ்வில் இடம் பெற்ற தளபதி கச்சேரி பாடலுக்கு அமைச்சர் கீர்த்தனா நடனமாடினார்.
முதல்வர் பிறந்தநாளையொட்டி நடந்த மாரத்தான் போட்டியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதனும் விஜய் பாடலுக்கு நடனமாடி மகிழ்வித்தார். சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழாவில் கூட சிங்கப்பெண்ணே பாடல் ஒலித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications