தென்மாவட்ட இளைஞர்களுக்கு செம சான்ஸ்.. 6000 பேருக்கு வேலை! பின்னக்கிள் Phase 2 திறந்துவைத்த ஸ்டாலின்!
சென்னை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமான பின்னக்கிள் இன்ஃபோடெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
மதுரை வடபழஞ்சியில் பின்னக்கிள் இன்போடெக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் 1.80 லட்சம் சதுர அடியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிறுவனத்தில் தற்போது 950 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், 2026-க்குள் 6 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப மையத்தை பின்னக்கிள் நிறுவனம் மதுரை வடபழஞ்சியில் அமைத்துள்ளது. இது இந்தியாவில் அமையும் நான்காவது Global Delivery Centre. இந்த பின்னக்கிள் நிறுவனத்தின் மையம் மூலமாக 6,000 பேருக்கு, குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுரை சிறப்பு பொருளாதார மண்டலம், வடபழஞ்சியில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 245.17 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துள்ளது. இதில் 120 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,80,000 சதுர அடி பரப்பளவில் 950 பணியாளர்களுக்கு பணிவாய்ப்பினை அளித்து, உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப மையத்தை பின்னக்கிள் நிறுவனம் அமைத்துள்ளது. 6,000 பேருக்கு, குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், பொருளாதாரத்தை வளர்க்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், தொழில்துறையில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நம்முடைய இலக்கு என்பது தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை பெருக்கி, அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் அடைந்தது என்ற நிலையை எட்டுவது தான்.
எங்களுடைய இந்த இலக்கை அடைய உதவிடும் வகையில் பின்னக்கிள் போன்ற நிறுவனங்கள் இன்னும் பிற தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக இந்த தருணத்தில் வைக்கிறேன்.
ஐடி என்றாலே கருணாநிதி தான். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்தியாவிலேயே முதன்முதலாக 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கி, தமிழ்நாட்டின் ஐடி புரட்சிக்கு வித்திட்டவர் தலைவர் கருணாநிதி.
சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து இன்று ராஜீவ் காந்தி சாலை என அழைக்கப்படும் OMR சாலையை தகவல் தொழில்நுட்ப தாழ்வாரமாக வழிவகுத்தார். எதிர்காலம் என்பது டிஜிட்டல் காலம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள் கணினி பயில்வதை ஊக்குவித்தார். அவர்கள் மென்பொருள் துறையில் சிறந்து விளங்குவதற்கு காரணமானார்.
இன்று தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் தான் நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர் அவர்கள். அத்தகைய தலைவர் கலைஞர் நூற்றாண்டில் மதுரையில் அமையும் இந்த பின்னக்கிள் நிறுவன மையம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
இதுபோன்ற வளர்ச்சியை விரைவுப்படுத்தி அதன் பயனை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பதை நமது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மெய்ப்பித்து காட்டுவார் என நான் நம்புகிறேன். இந்த சிறப்பான முன்னெடுப்பை நிகழ்த்தி காட்டியிருக்கும் இந்த பின்னக்கிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications