Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெர்மனி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. 7 நாள் ஐரோப்பிய பயணம்.. என்னென்ன திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று காலை புறப்பட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 31) முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார்.

mk stalin tn government germany

ஜெர்மனி, இங்கிலாந்து பயணம்

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். 2 ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில்முனைவோரை சந்திக்கிறார். 3 ஆம் தேதி லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் 4 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். 6 ஆம் தேதியும் அயலக தமிழர் நலவாரிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்தில் இருந்து 7 ஆம் தேதி புறப்பட்டு, செப்டம்பர் 8 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க

இதற்கிடையே, பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நிறுவனர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை தமிழ்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில், தனது வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்துக்கு இதுவரை ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்களை ஈர்த்திருக்கிறோம். உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க உள்ளேன். அவரது சிந்தனையை உலகு தொழும் காட்சியை இந்த பயணத்தில் பார்க்கப்போகிறோம். இது தமிழகத்துக்கு பெருமை" எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த 4 ஆண்டுகளில்

கடந்த 4 ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, பல நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளன.

2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

வெளிநாட்டு பயணங்கள்

கடந்த 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக 5ஆவது முறையாக வெளிநாடு சென்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+