ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்! சென்னையில் நடத்த ஒத்துழைப்பு தேவை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
சென்னை: ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வந்த இடத்தில் இது குறித்து பேசி பிரதமருக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாவதை தவிர்த்து, கடிதம் மூலம் தனது கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதன் விவரம் வருமாறு;

பிரதமருக்கு நன்றி
சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிய கடற்கரை விளையாட்டு
இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடி அவர்கள் காட்டிவரும் ஆர்வத்தை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, கடந்த மே மாதம் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசின் உத்தரவாதம்
இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை (guaranteeing free passage for the participants to these games along with other guarantees) ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இது தொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதத்திற்குள்
இதனிடையே வரும் செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications