தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ‘சூப்பர்’ அறிவிப்பு!
சென்னை: காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வருவாய், மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல்நிலை என வரிசைபடுத்தப்பட்டு அதற்கேற்ப திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றில் பெரிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை தமிழக முதலமைச்சரின் பரிசீலனைக்குப் பிறகு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த 4 நகராட்சி பகுதிகளுடன் கூடுதலாக சில ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்பது அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிரடியாக, மாநகராட்சிகளை உருவாக்கி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை புதிதாக மாநகராட்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் 4 மாநகராட்சிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் உள்ளன.
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி; நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி உருவாக்கப்படுகிறது.















Click it and Unblock the Notifications