புதுசா கட்சி தொடங்குறவன் எல்லாம் திமுக அழியணும்னு நினைக்கிறாங்க.. விஜய் மீது ஸ்டாலின் மறைமுக அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசி இருந்த நிலையில், முதன் முறையாக, விஜய்க்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் தவெக தலைவர் விஜய். சித்தாந்த எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்கிற ரீதியில் பேசினார் விஜய்.

mk stalin chennai vijay

பிளவுவாத அரசியல், ஊழல் மலிந்த அரசியல் ஆகிய இரண்டையும் எதிர்க்க போகிறோம். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்படுவோம் எனப் பேசினார் விஜய்.

மேலும், திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்து கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள்தான் தான் தங்களது அரசியல் எதிரி என்றார் விஜய். இவ்வாறு ஆளுங்கட்சியான திமுகவை தாக்கி பேசியிருந்தார் விஜய். இதற்கு திமுகவினர் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

mk stalin chennai vijay

இதுகுறித்து அண்மையில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல் முறையாக தவெக தலைவர் விஜய்க்கு மறைமுக பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். இன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய ஸ்டாலின், விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "திமுக அரசு சிறப்பாகச் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. இன்று வருபவன் எல்லாம், புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழியவேண்டும் என பேசி வருகிறார்கள். தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பேரறிஞர் அண்ணா பாணியில் சொல்கிறேன்.. வாழ்க வசவாளர்கள்.

mk stalin chennai vijay

அவர்கள் பேசுவதைப் பற்றி எல்லாம் நான் கவலையே படவில்லை. எங்கள் போக்கு மக்களுக்கு நல்லது செய்யும் போக்குதான். மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு நேரம் போதவில்லை. எந்த நம்பிக்கையோடு மக்கள் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கடந்த 2017-ல் மாணவி அனிதா இறந்தபோது, இல்லை தற்கொலை செய்து கொண்டபோது, நாம் அனைவரும் தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானோம். அந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்று நான் நம்புகிறேன்.

நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்து, உயிரைப் பறித்துவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒருநாள் மத்திய அரசுப் பணியத்தான் போகிறது. அது நடந்துதான் தீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும், நாளை அல்லது நாளை மறுநாள் அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அனிதாவின் நினைவாக முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், 2019-ம் ஆண்டு இந்த அனிதா அகாடமி தொடங்கப்பட்டது. இங்கு இதுவரை 12 குழுக்களில் 974 பெண்களும், 8 குழுக்களில 538 ஆண்களும் என இதுவரை 1512 பேர் Tally பயிற்சி முடித்து இலவச லேப்டாப் பெற்றுள்ளனர். தையல் பயிற்சி முடித்த 2536 மகளிர் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு திட்டங்களையும் இந்த திராவிட மாடல் அரசு பார்த்துப் பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. 'நான் முதல்வன்', 'புதுமைப்பெண்' உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் பயனடைந்து வருகின்றனர். தமிழக இளைஞர்களை அவர்களுடைய எல்லா நிலைகளிலும் இருந்து தகுதி வாய்ந்தவர்களாக உயர்த்துவதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம். ஆனால், இன்றைக்கு இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை, என்று சிலர் குறைகூறிக் கொண்டு உள்ளனர்.

அவர்கள் இதையெல்லாம் பார்க்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளாகப் போகிறது. தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை கூறினோமோ, அதையெல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எஞ்சியிருக்கிற ஒன்றிரண்டு தேர்தல் வாக்குறுதிகளையும், உறுதியாக விரைவாக நிறைவேற்றப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

தொழில்துறையில் தமிழகம் இன்றைக்கு முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல தொழில்முனைவோர்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர். அதற்கு தேவையான மனித ஆற்றலை கல்லூரிகளில் நாம் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தொலைநோக்கு சிந்தனை கொண்ட இந்தியாவிலேயே சிறந்த அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

சாதனை செய்யும் அரசாங்கமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவர அறிக்கைகளில் முதன்மையான இடம்பெறக்கூடிய அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திட்டங்களை அறிவித்துவிட்டுப் போகலாம். நிதியைக்கூட ஒதுக்கிவிடலாம். ஆனால், இதையெல்லாம்விட, அந்த திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கக்கூடிய அரசாக இந்த அரசு இருந்து வருகிறது.

சமீபத்தில் சென்னையில் மழை பெய்தது. இரண்டுநாள் மழை பெய்தது. ஆனால், சாலையில் தண்ணீர் தேங்கவில்லை என்ற செய்திதான் பத்திரிகைகளில் வந்தது. ஆனால், சில மீடியாக்கள் கடந்த வருடம் பெய்த மழையின் படங்களைப் போட்டு இந்த ஆட்சியில் தண்ணீர் தேங்கியிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். காரணம் திமுக வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதுதான் காரணம்.

அதனால்தான், யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, நான்கு ஆண்டுகளைத் தொடக்கூடிய நிலையில் இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய போக்கு, மக்களுக்கு செய்யக்கூடியதுதான். தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கான பணி செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+