“அன்புத் தம்பி”.. ராகுல் காந்திக்கு நெகிழ்ச்சிகரமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!
சென்னை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சிகரமான வீடியோவை பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து உற்சாகமாக ராகுல் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ராகுல் காந்தி மிக உயர்ந்த இடத்துக்கு செல்வார். இந்த ஆண்டு முழுவதும் ராகுலுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிகள் வந்து சேரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதில், ராகுல் காந்தி தமிழர்களைப் பற்றியும், முதல்வர் ஸ்டாலினை "எனது அண்ணன் ஸ்டாலின்" என்று குறிப்பிட்டும் நெகிழ்ச்சிகரமாகப் பேசியவை இடம்பெற்றுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இருவரும் பல்வேறு சமயங்களில் ஒருவொருக்கொருவர் தங்கள் அபரிமிதமான அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேடைகள் தோறும் ராகுல் காந்தியை வியந்து பாராட்டுவார் ஸ்டாலின். அதேபோல, ராகுல் காந்தி, தன் அண்ணன் என ஸ்டாலினை குறிப்பிடுவார். அரசியல் தலைவர்களில் நான் அண்ணன் எனச் சொல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என்றும் ராகுல் காந்தி பேசி இருக்கிறார்.

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கோவை செட்டிபாளையத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ராகுல் காந்தி, வரும் வழியில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார். சாலையில் இருந்த தடுப்புச் சுவரை தாண்டி குதித்து கடைக்குச் சென்ற அவரை, ஸ்வீட் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கைகுலுக்கி வரவேற்றனர்.
அங்கிருந்த பெண் ஒருவர் "யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் சார்?" என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு அவர், "என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக" என்று பதிலளித்தார். பொதுக்கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார்.
Happy Birthday, dear brother @RahulGandhi!
— M.K.Stalin (@mkstalin) June 19, 2024
Your dedication to the people of our country will take you to great heights. Wishing you a year of continued progress and success. pic.twitter.com/As1bHkTKR5
அப்போது, தான் வாங்கி வந்த ஸ்வீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அண்மையில் கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "பிரதமர் மோடி தனது எட்டு தமிழகப் பயணங்களின் மூலம் உருவாக்க முயன்ற கதையை, என் அன்புச் சகோதரர் ஒரு ஸ்வீட் பாக்ஸ் மூலம் ஒரேயடியாக உடைத்துவிட்டார். கோயம்புத்தூர் வந்தபோது எனக்கு பரிசளித்த தம்பி ராகுல் என் மீது காட்டிய பாசத்தை மறக்க மாட்டேன்." எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தான், இன்று ராகுல் காந்தி தன்னை தனது அண்ணன் எனப் பேசிய வீடியோவை பகிர்ந்து, தம்பி ராகுல் காந்திக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications