வந்து விழுந்த கேள்வி! “வலுத்திருக்கு.. பழுக்கலையே”.. கலைஞர் ஸ்டைலில் ஸ்டாலின் கொடுத்த “நச்” பதில்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இன்று சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினிடம் அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு தனது தந்தை கருணாநிதி ஸ்டைலில் நறுக்கென பதில் கொடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் நகர் பகுதியில் தமிழக முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொளத்தூர் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே? அதுகுறித்து பரிசீலிக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் "கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை" என நறுக்கென பதில் அளித்தார்.
தனது தந்தை கருணாநிதி பாணியில் வார்த்தையால் விளையாடிய முதல்வர் ஸ்டாலினின் பதிலைக் கேட்டு அருகில் இருந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வெடித்துச் சிரித்தனர். தொடர்ந்து, அமைச்சரவை மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். பல்வேறு மாவட்டங்களும் திமுக கூட்டங்களிலும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். அண்மையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதியே அண்மையில் பதில் அளித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், "ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞரணி செயலாளர் பதவியே எனக்கு மிகவும் நெருக்கமானது. இதையேதான் நம் தலைவரும் ஏற்கெனவே கூறியுள்ளார். அதையே தான் நானும் சொல்கிறேன்" எனக் கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications
