மாநில உரிமைகளை பாதுகாக்க! நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் புதிய குழு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே மாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் பேசினார். மேலும் இன்றைய தினம் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழகத்தில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் சட்டசபையில் மாநில சுயாட்சி குறித்து ராஜமன்னார் குழுவின் அறிக்கையை சுட்டிக் காட்டி முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விஷயத்தையும் மத்திய அரசிடம் போராடியே பெற வேண்டியுள்ளது. உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும்.
இதை உணர்ந்தே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தமிழகம் வலியுறுத்துகிறது.
1974 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்கள் அதிகாரம் கொண்டவைகளாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும். மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது. நீட் தேர்வால் பல மாணவர்களின் கனவு சிதைக்கப்படுகிறது. நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது. கல்வியை மாநில பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும். மாநில அரசிடம் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளன. மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையான வரும் 2026 ஆம் ஆண்டு மறுவரையறை மூலம் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கான பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஜிஎஸ்டியால் மாநிலங்களில் மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் பெரும் பங்களிப்பை தமிழ்நாடு வழங்கிவருகிறது.
தமிழகம் வழங்கும் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி அளிக்கிறது.
மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். குரியன் ஜோசப் குழு 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் அறிக்கை அளிக்கும். இறுதி அறிக்கை 2 ஆண்டுகளில் அளிக்கும்.
இந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் செட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அனைத்து மாநிலங்களின் உரிமை காக்கவே இந்த குழு அமைக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு வேண்டும் என வலியுறுத்துவது தமிழகத்தின் நலனிற்காக மட்டுமல்ல என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications