சென்னை-பஞ்சாப் போட்டியை நேரில் ரசித்த முதல்வர் ஸ்டாலின்! கவனம் ஈர்த்த கூலிங் கிளாஸ்-நீலநிற டீசர்ட்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே-பஞ்சாப் அணிகள் மோதி வரும் நிலையில் இந்த போட்டியை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டுரசித்தார். கூலிங் கிளாஸ், நீலநிற டீசர்ட் அணிந்து அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கி அதிரடியாக ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பஞ்சாப் பவுலர்கள் திணறினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது. அப்போது 31 பந்தில் 37 ரன்கள் எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அதன்பிறகு தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினர். கான்வே அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
போட்டியில் அதிகபட்சமாக கான்வே 92 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே கேப்டன் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வேளையில் கிரிக்கெட் மைதானம் அதிர்ந்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி தொடர்ந்து ஆடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியை முதல்வர் ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் கண்டு ரசித்தார். பொதுவாக வேஷ்டி, சட்டையில் காட்சியளிக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று வித்தியாசமாக காட்சியளித்தார். கூலிங் கிளாஸ், டீசர்ட் அணிந்து அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுதொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை பார்ப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் அவர் சென்னை அணியின் போட்டியை கண்டு ரசித்தார். முன்னதாக கடந்த 21ம் தேதி சென்னையில் நடந்த சென்னை-ஹைதரபாத் அணிகள் இடையேயான போட்டியை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா மற்றும் குடும்பத்துடன் நேரில் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications