கேக் வெட்டி கொண்டாடிய ஸ்டாலின்.. "அங்கிள்" விமர்சனம்.. விஜயை எல்லாம் கண்டுக்காதீங்க.. திமுக முடிவு
சென்னை: மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக கிண்டல் செய்து பேசினார். அவரின் பேச்சு.. எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும், ஸ்டாலினின் விமர்சனத்தை பெற வேண்டும் என்று திட்டமிட்டு பேசப்பட்டது போல இருந்தது.
ஆனால் இந்த நிகழ்வு பற்றி ஸ்டாலின் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது 50வது திருமண ஆண்டு விழாவை கடந்த வாரம் கோலாகலமாக கொண்டாடினார். இந்த சிறப்புமிக்க நிகழ்வில், அவர் தனது தாயார் தயாளு அம்மாளை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.

திருமண ஆண்டு விழாவையொட்டி, திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களை கௌரவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் பல்வேறு வகையான உணவுகளுடன் சிறப்பான விருந்து பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வு மகிழ்ச்சியுடனும், சுமுகமான சூழ்நிலையுடனும் நிறைவுற்றது.
கொண்டாட்டத்திற்கு இடையே விஜயின் அங்கிள் பேச்சு
இந்த கொண்டாட்டத்திற்கு இடையே விஜயின் அங்கிள் பேச்சு வெளியாகி உள்ளது. இதை ஸ்டாலினும் கவனித்து இருக்கிறார். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. விஜய் என்னவேண்டுமானாலும் பேசட்டும், அவரை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று ஸ்டாலின் புறந்தள்ளிவிட்டார் என்று கூறப்படுகிறது.
அதிலும் கேக் எல்லாம் வெட்டி ஸ்டாலின் இயல்பாக மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார். விஜய் பேசியதை பற்றி பெரிதாக அவர் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அங்கிள் விமர்சனம் விஜய்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பாஜகவையும், திமுகவையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தங்கள் கட்சியின் ஒரே கொள்கை ரீதியான எதிரி பாஜகதான் என்றும், அரசியல் ரீதியான எதிரி திமுகதான் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், டீலிங் போட்டு கூட்டணி அமைக்கும் கட்சி தங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் கட்சி உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜகவுடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை என விஜய் சுட்டிக் காட்டினார். தவெக முன்னெடுக்கும் அரசியல் உண்மை, உணர்வுபூர்வம், மற்றும் நல்ல அரசியல் மட்டுமே என்றும், நல்லது மட்டுமே செய்யும் அரசியல் என்றும் அவர் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்றும், வேறு போட்டி இருக்காது என்றும் விஜய் சவால் விட்டார். திமுக கூட்டணி அமைத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதாகவும் அவர் விமர்சித்தார். எம்ஜிஆர் இருக்கும் வரை யாராலும் முதல்வராக ஆக முடியவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகவும், ஒரு ரெய்டு வந்ததும் உடனடியாக டெல்லிக்குச் சென்று ரகசியச் சந்திப்புகளை நடத்துவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். முதல்வர் ஸ்டாலினை "ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங் அங்கிள்" என விமர்சித்தார். "மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்" என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஸ்டாலின் விஜய் பதில் இல்லை
மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாகக் கேலி செய்த போதிலும், ஸ்டாலின் இதுவரை விஜய் குறித்துப் பேசியதில்லை. விஜயை ஒரு பொருட்டாக கூட ஸ்டாலின் பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே விஜயின் பேச்சு, எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும் அல்லது விமர்சனத்தைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் அமைந்திருந்தது.
"அங்கிள்" என்று சொன்னால் ஸ்டாலின் கோபப்பட்டு விமர்சிப்பாரா, அல்லது தனக்கு பதிலடி கொடுத்து தன்னை முக்கியத்துவம் வாய்ந்தவராகப் பார்க்க வைப்பாரா என்ற நோக்கத்துடன் விஜய் பேசியதாகத் தோன்றியது. ஆனால், விஜய் கருத்துக்கு பதிலடி தர வேண்டாம் என திமுக மேலிடம் கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செயலாளர் அளவில் உள்ள சிலர் மட்டும் இப்போதைக்குப் பதிலடி தரட்டும் என்றும், இதற்கு மேல் யாரும் பதிலடி தர வேண்டாம் என்றும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. விஜய் அவர்களுக்குப் போட்டியே இல்லை என்றும், அவரைப் பொருட்படுத்த வேண்டாம், முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications