CM Vijay: விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள்! பெரம்பூர் தொகுதிக்கு சர்பிரைஸ் கொடுக்கும் முதல்வர்!
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தனது 52 ஆவது பிறந்தநாளை தனது பெரம்பூர் தொகுதி மக்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது மட்டுமல்லாமல் விஜய்க்கென வியாசர்பாடியில் எம்எல்ஏ அலுவலகமும் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, முதல்வராக அரியணை ஏறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், வரும் ஜூன் 22-ம் தேதி தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இத்தனை காலம் திரையுலகின் 'தளபதி'யாக கோடிக்கணக்கான ரசிகர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடியவர், இப்போது மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இரட்டை வெற்றி... ஒரு தேர்வு!
கடந்த 17-வது சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தார் விஜய். எனினும், தனது அரசியல் பயணத்தின் மையப்புள்ளியாக பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியைத் துறந்தார்.
வியாசர்பாடியில் தயாராகும் 'மக்கள் தர்பார்'
தற்போது பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகத் தீவிரமாகப் பணியாற்றி வரும் முதல்வருக்கு, அந்தத் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதியில் மிகப்பிரம்மாண்டமான முறையில் புதிய சட்டசபை உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன், மக்கள் எளிதில் அணுகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன.
கேக் வெட்டி கொண்டாட்டம்
தனது 52-வது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடாமல், தொகுதி மக்களுடன் எளிமையாகக் கொண்டாட முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். ஜூன் 22-ம் தேதி காலை, வியாசர்பாடியில் உள்ள தனது புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தைத் திறந்து வைக்கும் அவர், அங்கேயே தொகுதி மக்கள் முன்னிலையில் கேக் வெட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
நலத்திட்ட உதவிகள் மாரத்தான்
பிறந்தநாள் அன்று வெறும் கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், தனது தொகுதிக்குட்பட்ட ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளன.
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில், தனது பிறந்தநாளை மக்கள் சேவையோடு இணைத்துக் கொண்டாடத் தயாராகி வரும் முதல்வரின் இந்தத் திட்டம், பெரம்பூர் தொகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications