தடுக்காத தமிழக அரசு! புயலில் சிக்கி ஆந்திராவில் கரை ஒதுங்கிய காசிமேடு மீனவர் உடல்கள்! நிதியுதவி அறிவித்த விஜய்
சென்னை: ஆந்திராவில் முரசு புயலில் சிக்கி உயிரிழந்த சென்னை காசிமேடு மீனவர்களுக்கு தலா ரூ 7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உடல்களை அரசு செலவில் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். முரசு புயல் காரணமாக கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி காசிமேட்டைச் சேர்ந்த 4 படகுகள் ஆந்திர பிரதேச கடற்கரையில் நங்கூரமிடப்பட்டன. அவற்றில் மூன்று ராமாயப்பட்டணம் துறைமுகத்திலும், ஒன்று நிஜாம்பட்டினம் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டன.
இதனிடையே நிஜாம்பட்டினத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த படகில் 9 மீனவர்கள், அதிகாரிகளுக்கு தகவலை தெரிவிக்காமல், ராமாயப்பட்டணத்தில் நங்கூரமிட்டுள்ள மீனவர்களுடன் சேர்வதற்காக சென்றனர்.
அப்போது ராமாயப்பட்டணத்தை நோக்கிச் சென்ற இவர்களது படகு திடீரென புயலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 9 மீனவர்களும் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
காசிமேடு மீனவர்களின் படகு கொத்தாபுரம் கடற்கரையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் கடலில் கவிழ்ந்து கிடப்பதை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து மீன்பிடி படகு கொத்தாபுரம்க கடற்கரைக்கு இழுத்து வரப்பட்டது.
இந்த நிலையில் மாயமான தமிழக மீனவர்களின் உடல்கள் ஆந்திர கடற்கரையில் ஒதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரை ஒதுங்கிய 9 மீனவர்களில் 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவிமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு https://t.co/ROFpiC6DPy
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 5, 2026
இந்த நிலையில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 29.10.2026 அன்று விசைப்படகில், மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற கா.பக்கிரிகசாமி (எ) சூர்யா (வயது 49), திரு.ம.குப்பன் (வயது 48), சே.மோகன் (வயது 47), கா.ராஜேஷ் (வயது 52), ஆ.முருகன் (வயது 48), வா.குப்புசாமி (வயது 58), சி.விஜயகாந்த் (வயது 44), அ.அரவிந்த் (வயது 40), மு.நாராயணன் (வயது 57) ஆகிய 9 மீனவர்கள் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைப் துறையால் வழங்கப்பட்ட புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையினால், ஆந்திரப் பிரதேச மாநிலம், நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருந்த நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயப்பட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், காணாமல் போன படகில் இருந்த மீனவர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்களுக்கு 03.11.2026 அன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காணாமல் போன படகிலிருந்து எந்தவிதத் தொடர்பும் கிடைக்கப் பெறாததாலும், அவர்களின் இருப்பிடம் குறித்த எந்தவிதத் தகவலும் தெரியாததாலும், சென்னை மீன்பிடித் துறைமுக மீன்பிடி படகுகள், ஆந்திரப் பிரதேச மாநில மீன்பிடி படகுகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காணாமல் போன மீனவர்களின் நிலையை அறிய, ஆந்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோதபட்டினம் கடலோரத்தில் சே.மோகன், ஆ.முருகன், சி.விஜயகாந்த் ஆகிய மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், மீட்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களை அடையாளம் காணும் பணியினையும், காணாமல் போன எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணியினையும் விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஏழு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும், அதில் தலா இரண்டு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கிடவும், அவர்களின் உடல்களை அரசு செலவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
