கலங்கிப்போன முதல்வர் விஜய்.. கொடியேற்றும் விழாவில் இறந்த காவலருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்
சென்னை: சென்னை ஜார்ஜ் கோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவில், இசை வாத்தியம் வாசிக்க வந்த தூத்துக்குடியை சேர்ந்த காவலர் தர்மராஜ் மயங்கி விழுந்து இறந்தார். இந்நிலையில் தான் முதல்வர் விஜய் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று 80வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக விஜய் தேசியக்கொடியை ஏற்றினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு முதல்வர் விஜய் மாநில மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
இந்த விழாவில் முதல்வர் விஜய்க்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை, போலீஸ் இசை வாத்திய குழுக்களின் மரியாதை வழங்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காவலர் தர்மராஜ் இசை வாத்தியம் வாசிக்க வந்திருந்தார். அவர் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணடைந்தார். முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தின கொடியேற்றும் விழாவில் காவலர் ஒருவர் இதயம் செயலிழந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் இறந்த காவலர் தர்மராஜ்க்கு, முதல்வர் விஜய் ஆறுதல் கூறி நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஏ.தர்மராஜ் (வயது 56) நேற்று (15.08.2026) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்தார்.
சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
முதல்நிலைக் காவலர் ஏ.தர்மராஜ் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஏ.தர்மராஜை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.


Click it and Unblock the Notifications
