மகளிருக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? விஜய் அதிரடி அறிவிப்பு
சென்னை: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இரு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது. அப்போது 21 ஆம் தேதி காலமான நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விஜய் 110 விதியின் கீழ் சில திட்டங்களை அறிவித்து பேசியதாவது: 4 மாதங்களாக வளைகுடாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
இதனால் மக்களின் செலவும் அதிகரித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், மக்கள் நலனை பாதுகாக்கவும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் எரிவாயு சிலிண்டருக்கு செலவழிக்கப்படும் தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
எனவே குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும்.
இந்த திட்டம் பொங்கல் திருநாள் முதல் செயல்பாட்டுக்கு வரும். எரிவாயு சிலிண்டருக்கான விலை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக எண்ணெய் நிறுவனங்களிடம் பேசி தகவல்கள் பெறப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் 1,30,16,104 பேர் பயனடைவர். இந்த திட்டத்தால் ரூ 4000 கோடி கூடுதலாக அரசுக்கு செலவாகும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறு, குறு வியாபாரிகள், மாற்றுத் திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தில் பயன்பெறுவர்.
நிதி நெருக்கடியான சூழலில் கூட மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு விஜய் அறிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலின் போது குடும்பத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என தவெக வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் கட்டமாக 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என விஜய் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அது போல் விஜய் மேலும் பேசுகையில், ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல பெண் கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம், மருத்துவம், சமூக வாழ்வின் அனைத்து தளங்களிலும் சுதந்திரமாக பங்கேற்கும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. மகளிரின் பயண சுதந்திரம் அவர்களின் பொருளாதாரம், குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது. தற்போது செயலில் உள்ள மகளிர் இலவச பயணத்திட்டத்தில் நகர பேருந்துகளில் 40 கிலோமீட்டருக்குள் பயணம் என்ற விதி உள்ளது. மற்ற வகையான பேருந்துகளில் இலவச பயண திட்டம் அனுமதிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் வசிக்கும் மகளிர் போக்குவரத்தால் எந்த வாய்ப்பையும் இழக்கக்கூடாது என்ற சமூக நீதி சிந்தனையில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளில் வெற்றிப் பயண திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ்,எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். மாவட்டங்களிடையே பயணம் மேற்கொள்ள புறநகர், மலைப்பகுதிகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.
இதில் வருமான வரம்பு உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த திட்டம் இதர சேவைகளில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். இதில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளும் பயணிக்கலாம் என அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
