எம்எல்ஏக்களுக்கு ஜாக்பாட்! அரசு சார்பில் வாகனம்.. மாதம் 75 ஆயிரம் வாகனப்படி.. விஜய் அறிவிப்பு
சென்னை: தொகுதி சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எம்.எல்.ஏக்களுக்கு மாதம் ரூ. 75 ஆயிரம் வாகனப்படி வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் விசிக எம்எல்ஏ ஜோதிமணி கடந்த 12 ஆம் தேதி பேசும் போது சபாநாயகருக்கு ஒரு கோரிக்கை விடுத்து இருந்தார். அதில், எம்எல்ஏக்கள் மக்கள் பணி செய்ய வாகனம் , தனி உதவியாளர் போன்ற வசதிகளை அரசு செய்துதர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று விதி எண் 110- கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். தொகுதி சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வாகனம் வழங்கப்படும் என்றும் வாகனப்படியாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். எம்.எல்.ஏக்கள் உதவியாளர் ஒருவரை நியமித்துக்கொள்ளலாம். அதற்கு அரசு சார்பில் ஒரு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார்.
முதல்வர் விஜய் அறிவிப்பு
முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். குறிப்பாக எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். விஜய் கூறியதாவது:-
கடந்த 12 ஆம் தேதி காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ ஜோதிமணி பேசும் போது பல எம்.எல்.ஏக்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும் தொகுதி பணிகளை ஆய்வு செய்யவும் பார்வையிடவும் கடினமாக உள்ளதாகவும் கோரிக்கை வைத்தார். மகக்ளாட்சியின் மிக முக்கிய தூண்களாக விளங்குபவர்கள் எம்.எல்.ஏக்கள், தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் எளிய பின்னணியில் பண பலம் இன்றி, அரசியல் பின்னணி இன்றி மக்களின் பேரதாரவோடு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் முறை எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.
மக்களை நேரடியாக சந்திக்க
மக்களுக்கான நிர்வாகம் நேர்மையின் பாதையில் என்ற அடிப்படையில் லஞ்ச லாவண்ய மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் தவெக அரசு செயல்பட்டு வருகிறது. தங்களது தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறியவும், அரசு திட்டங்கள் மக்களை சென்றடவைதை கண்காணிக்கவும் தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை எம்.எல்.ஏக்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, எம்.எல்.ஏக்கள் தங்கள் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும், திறம்பட மேற்கொள்ள வசதியாகவும் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பயண தேவைகளுக்கு பிறரை சார்ந்து இருப்பதை தடுத்து எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தொகுதி முழுவதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும்.
ரூ.75 ஆயிரம் வாகனப்படி
எம்.எல்.ஏக்கள் ஒரு உதவியாளர் நியமனம் செய்து கொள்வது அவசியம் என கருதப்படுகிறது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி தரும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக வாகனத்திற்கு டிரைவர், எரிபொருள் வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் தோறும் ரூ. 75 ஆயிரம் வாகனப்படியாகவும் அலுவலக பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமனம் செய்ய மாதம் தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய ஆணைகள் வெளியிடப்படும்" என்றார்.
வாகன வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ ஜோதிமணியும் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார். மேலும், நன்றி தெரிவித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் பேசினர்.


Click it and Unblock the Notifications
