பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் தவறு இருக்கலாம்! அதற்காக.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு வாதம்
சென்னை: முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில் பெரம்பூரில் அவர் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகலை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு நேற்று தொடங்கியது. அப்போது விஜய் தரப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள், சட்ட ஆணைய பரிந்துரைகள் ஆகியவற்ரை சுட்டிக் காட்டி வாதம் முன்வைக்கப்பட்டது.
வேட்புமனுவில் முதல்வர் விஜய் தனது சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என தேர்தல் வழக்குகளின் மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என வாதிடப்பட்டது.
விஜய் தரப்பு வாதம் முடிவடையாததால் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு முதல்வர் விஜய் தரப்பில், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாமல் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ரூ 600 கோடிக்கு மேல் எனக்கும் மனைவிக்கும் சொந்தமான சொத்துகளின் விவரங்கள் உள்ளிட்டவை வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தவறுகள் இருக்கலாம். அதற்காக எனது வேட்புமனுவை ஏற்றது தவறு என சொல்ல முடியாது. இவ்வாறு விஜய் தரப்பு வாதம் செய்தது.
இதையடுத்து விஜய்க்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்களின் வாதங்கள் நாளை நடைபெறுவதால் இந்த வழக்குகள் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
