சினிமாவை மறக்காத விஜய்! முதல்வரானதும் திரைத்துறைக்கு வழங்கிய மிகப்பெரிய ‘கிப்ட்'!
சென்னை: தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக வலம் வந்த விஜய் இன்று தமிழக முதல்வர் அரியணையில் அமர்ந்து மாநிலத்தை ஆண்டு வருகிறார். கட்சி தொடங்கிய வெறும் இரண்டே ஆண்டுகளில் திமுக, அதிமுக என 2 பெரிய கட்சிகளை சட்டசபை தேர்தலில் வீழ்த்தி தவெக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் சினிமா வழியாக விஜய்க்கு கிடைத்த பிரபலமும், ரசிகர்கள் பலமும் தான். இப்படி தன்னை வளர்த்துவிட்ட சினிமா துறைக்கு முதல்வரான விஜய் தீபாவளியையொட்டி பெரிய கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கு முன்பு வரை திரைத்துறையில் உச்சபட்ச நடிகர்களின் படங்கள் என்றால் ரிலீசுக்கு முந்தைய நாள் இரவிலேயே தியேட்டர்கள் களைகட்டிவிடும். உயரமான கட்அவுட்டுகள், ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள், பாலாபிசேகம், மேள - தாளத்துடன் ஆட்டம், பாட்டம் என்று மொத்த தியேட்டரும் திருவிழா போல் மாறிவிடும்.
இதற்கு முக்கிய காரணம் தியேட்டரில் அதிகாலையில் 6 மணிக்கு சினிமா ரிலீஸ் ஆனது தான். படம் ரிலீசாகும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் இரவே தவம் கிடப்பார்கள். 6 மணியானதும் மடை திறந்த வெள்ளம் போல் தியேட்டருக்குள் நுழையும் ரசிகர்கள் டைட்டில் கார்டில் இருந்தே கொண்டாட்டத்தை தொடங்குவார்கள். படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் விசில் பறக்கும். பாடல்களுக்கு திரையரங்களில் உள்ள மொத்த கூட்டமும் நடனமாடும். ரசிகர்களின் சத்தத்தில் மொத்த திரையரங்கமும் அதிரும்.
ரத்தான 6 மணி காட்சிகள்
இந்த கொண்டாட்டம் 2023ம் ஆண்டுன் நின்றுப்போனது. ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் இருந்து அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. காலை 6 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதோடு, காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையரங்குகளில் தொடங்கியது. ஆனாலும் அடங்காத ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ரசிகர்களின் திரைப்படங்களை முதல் ஆளாக பார்க்க வேண்டும் என்பதற்காக அண்டை மாநிலங்களில் உள்ள திரையரங்கங்களுக்கு படையெடுத்தனர்.
சோர்வான ரசிகர்கள்
காலை 9 மணிக்கு தமிழகத்தில் புதிய படம் ரிலீசாவதற்குள் அண்டை மாநிலங்களில் காலை 8.15 முதல் 8.30 மணிக்குள் முதல் காட்சி முடிவடைந்துவிடும். அவர்கள் ரிவ்யூவும் சொல்லிவிடுவார்கள். தற்போதைய சமூக வலைதள காலத்தில் இது வேகமாக பரவி விடுகிறது. நெகட்டிவ் ரிவ்யூ வந்தால் அது ரசிகர்களின் கொண்டாட்டத்தையும், திரைப்படத்தின் மீதான ஆர்வத்தையும் குறைத்தது.
அதுமட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் வசூலும் பாதிக்கப்பட்டது. தியேட்டரில் அதிகாலை 6 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதால் தமிழ் திரைப்படத்துறை இப்படியான பிரச்சனையை எதிர்கொண்டு வந்தது.
முதல்வர் விஜய் அரசு தந்த அனுமதி
ஆனால் தற்போது இந்த நிலை மாறி உள்ளது. சினிமா துறையில் டாப் நடிகராக வலம் வந்த விஜய் முதல்வராகி உள்ளநிலையில் தான் காலையிலேயே திரைப்படங்களை போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படம் புதிதாக வெளியாகும்போது முதல் 7 நாட்களுக்கு காலை 6 மணி முதல் மொத்தம் 6 காட்சிகள் வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி இந்த நடைமுறை அறிமுகம் ஆன நிலையில் அது திரைத்துறையினருக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. குறிப்பாக தீபாவளியையொட்டி திரைக்கு வந்த நடிகர் சூர்யாவின் 'சீன்' , நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2', மற்றும் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'ராமாயணம்' திரைப்படம் உள்ளிட்டவற்றுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ரசிகர்கள் ஹேப்பி
இதுபற்றி சூர்யாவின் ரசிகர் குடியரசு என்பவர் கூறுகையில், ''இதற்கு முன்பு சூர்யாவின் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க அண்டை மாநிலங்களுக்கு செல்வேன். பெரும்பாலும் நகரிக்கு செல்வேன். இதற்காக ஒருநாள் வேலைக்கு செல்ல முடியாது. வெளிமாநில தியேட்டர்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் கூட சொந்த ஊரில் சென்னை ரசிகர்களுடன் திரைப்படம் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைக்காது. இப்போது மீண்டும் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.
தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷம்
தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் டாக்டர் ஜி தனஞ்செயன் கூறுகையில், ''அதிகாலை காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யாவின் 'சீன்' திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் 400 முதல் 500 காட்சிகள் திரையிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டதால், மற்ற இடங்களிலுள்ள ரசிகர்களை போலவே, இங்கிருக்கும் ரசிகர்களும் ஒரே நேரத்தில் படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
வணிக ரீதியாகப் பார்த்தால் அனைத்துக் காட்சிகளும் சேர்ந்து ஒரு நாளைக்கு சுமார் 10 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி தருகிறது. 7 நாட்களில் இது சுமார் 70 கோடி ரூபாய் கூடுதல் வருவாயாக அமையும். தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி, இதன் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி (GST) மற்றும் பிற வரி வசூல்கள் அரசுக்கும் பயன் அளிக்கும்'' என்றார்.
விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி
'சீன்' திரைப்படத்தை விநியோகம் செய்யும் 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனத்தின் சக்திவேலன் கூறுகையில், ''இந்த அதிகாலைக் காட்சிகள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, வழக்கமான நேரங்களில் படம் பார்க்க சிரமப்படும் பணிபுரியும் மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. காலை 6 மணி காட்சிகள் இருப்பதால், அவர்கள் வேலைக்குச் செல்லும் முன்பே படத்தைப் பார்த்துவிட முடியும்.
இது அவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. திரைப்பட ஆர்வலர்களுக்கு இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை. திரைத்துறை முன்வைக்கும் சிக்கல்களையும் கோரிக்கைகளையும் முதலமைச்சரும் அமைச்சர்களும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இது திரைத்துறைக்கான தீபாவளி பரிசு'' என்றார்.
திரையரங்க உரிமையாளர்கள் ஹேப்பி
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில்,''முதல்வர் விஜய் திரைத்துறையின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். காலை 9 மணிக்கு தமிழகத்தில் புதிய படம் ரிலீசாவதற்குள் அண்டை மாநிலத்தில் காலை 8.15, 8.30 மணிக்கு படத்தின் முதல் காட்சியை பார்த்து மக்கள் வெளியே வந்துவிடுகிறார்கள். அவர்களின் விமர்சனங்களும் வந்து விடுகிறது.
வெளிமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் திரைப்படம் தாமதமாவது ரசிகர்களை மட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்களையும் பாதித்தது. இதுபற்றி விஜய்யிடம் கூறினோம். அவர் காலை 6 மணிக்கு திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்கி உள்ளார். தற்போதைய இந்த அனுமதி தமிழக திரைப்படத்துறையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் காலாவதியான ஒழுங்குமுறை சீர்த்திருத்த சட்டங்கள் உள்ளன. இதனை நீக்க வேண்டும். அப்படி செய்தால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 1,200 தியேட்டர்களின் எண்ணிக்கை 2026-27-ஆம் ஆண்டிற்குள் இருமடங்காக உயரக்கூடும். இது பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் சிறிய அளவிலான திரைப்படங்கள் என அனைத்துத் தரப்புத் திரைப்படங்களுக்கும் தேவையான தியேட்டர்களை வழங்கும்'' என்றார்.
விஜய் கொடுத்த பெரிய 'கிப்ட்'
மொத்தத்தில் திரைத்துறையில் இருந்து முதல்வராகி உள்ள விஜய் தன்னை வளர்த்து விட்ட சினிமாவை மறக்கவில்லை. தான் முதல்வராகி கொண்டாடிய முதல் தீபாவளியிலேயே காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கி இருப்பது விஜய்யால் சினிமா துறைக்கு கிடைத்த பெரிய கிப்ட் என்கின்றனர் சினிமா சார்ந்த தொழில் இருக்கும் பிரபலங்கள்.


Click it and Unblock the Notifications
