தவெகவின் மேற்கு வங்க தலைவராகும்.. மம்தாவின் சிம்ம சொப்பனம் சயோனி கோஷ்? விஜய் அவசர மீட்டிங்
சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தவெக தலைவர் விஜய் எடுத்து வரும் அடுத்தடுத்த தேசிய அரசியல் நகர்வுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. தேசிய அளவில் தன்னை 2029 லோக் சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான காய் நகர்த்தல்களை விஜய் செய்து வருகிறார்.
அண்மையில் வெளியான 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் 9.2 சதவீத ஆதரவுடன் பிரதமர் வேட்பாளர் ரேஸில் 3-வது இடத்தைப் பிடித்தது, உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் ஐந்து தென் மாநிலங்களில் புதிய கட்சிக் கிளைகளைத் தொடங்கும் திட்டங்கள், மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் ராகுல் காந்தியின் தூதர்களான மாணிக்கம் தாகூரையும் பிரவீன் சக்கரவர்த்தியையும் விஜய் அலட்சியமாகத் திருப்பி அனுப்பியது என களம் சூடாகியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் சயோனி கோஷ், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியிருப்பது தேசிய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த திடீர் சந்திப்பு
ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான நடிகை சயோனி கோஷ், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அண்மையில் அதிருப்திக் குழுவில் இணைந்தவர். அவர் நேற்று சென்னை வந்து முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட சயோனி கோஷ், "தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை பாராட்டுக்குரியது. அத்துடன், மேற்கு வங்கத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து அவர் மிகுந்த வாஞ்சையோடு பகிர்ந்துகொண்டார்" எனத் தெரிவித்துள்ளார். சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்த இரு இளம் தலைவர்களின் இந்தச் சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆழமான தேர்தல் கணக்குகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்கத்திலும் தவெக கிளை?
2029 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து, கட்சியை 'தேசிய வெற்றி கழகம்' அல்லது 'நேஷனல் டிரையம்ப் பார்ட்டி' என மறுசீரமைத்து, குறைந்தபட்சம் 100 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்ற தவெக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக தென்னிந்தியாவைத் தாண்டி, உ.பி., பிகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் ஏற்கனவே 'விர்ச்சுவல் வாரியர்ஸ்' மூலம் இந்திப் பிரச்சாரமும், கட்சிக் கிளைகளைத் தொடங்கும் முயற்சிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மற்றொரு முக்கிய மாநிலமான மேற்கு வங்கத்திலும் தவெகவின் கொடியை ஏற்றுவதற்கான முதற்கட்டப் புள்ளியாகவே இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது. அங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு வெளியே மாற்று சக்திகளைத் தேடும் அதிருப்தித் தலைவர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து, தவெகவின் யூனிட்டை கொல்கத்தாவில் நிறுவ விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸுக்கு அடுத்த தலைவலி!
தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் தலைமை, தங்களை மதிக்காமல் விஜய் தனி தேசியப் பாதையைத் தேர்ந்தெடுப்பதாக ஏற்கனவே குமுறி வருகிறது. மறுபுறம், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுடன் தேசிய அளவில் நட்புறவை விரும்பும் காங்கிரஸுக்கு, அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களையே விஜய் சந்தித்துப் பேசுவது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் எச்சரிக்கைகளையோ, தமிழக காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டல்களையோ துளியும் பொருட்படுத்தாத விஜய், அண்டை மாநிலங்களைத் தாண்டி கிழக்கு இந்தியாவிலும் தனது அரசியல் வலைப்பின்னலை விரிவுபடுத்தத் தொடங்கியிருப்பது, அவரது 2029 பிரதமர் கனவு வெறும் மேடைப் பேச்சல்ல, மாறாக துல்லியமாக நகர்த்தப்படும் 'செஸ் ஆட்டம்' என்பதை நிரூபிக்கிறது.
தென் மாநிலங்கள், உத்தரப் பிரதேசம், பிகார் வரிசையில் இப்போது மேற்கு வங்கத்திலும் தவெகவின் கால்தடம் பதியத் தொடங்கியிருப்பது, 2029 தேசிய தேர்தல் களத்தில் விஜய்யை ஒரு தவிர்க்க முடியாத கூட்டாட்சித் தலைவராக நிலைநிறுத்தப் போவது உறுதியாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
