CM விஜய் புதிய அலுவலக டெண்டர் சர்ச்சை.. 32% குறைத்து ₹3.78 கோடிக்கு டெண்டரை அள்ளிய ராசி பில்டர்ஸ்!
சென்னை: முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகத்தை, புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய பிரதான கட்டடத்திலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றும் திட்டம் அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது. இதற்கான கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளது.
தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே இந்த புதிய ஆபிஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் பாஜக எழுப்பிய முறைகேடு புகார்கள் பேசுபொருளாயின. இந்தச் சூழலில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை கோரியிருந்த அலுவலக உள் அலங்காரப் பணிகளுக்கான நிதிப் புள்ளிகள் திறக்கப்பட்டு, அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
32% குறைத்து ஏலம் எடுத்த ராசி பில்டர்ஸ்
நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமையவுள்ள கபுதிய முதல்வர் அலுவலகப் பணிகளை பொதுப்பணித்துறை மூன்று தொகுப்புகளாகப் (Block 1, Block 2, Block 3) பிரித்து ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியிருந்தது. இந்த மூன்று தொகுப்புகளின் ஒட்டுமொத்த உத்தேச திட்ட மதிப்பீடு ₹5.54 கோடியாகும்.

தற்போது திறக்கப்பட்ட நிதி ஏல முடிவுகளின்படி, சென்னையைச் சேர்ந்த 'ராசி பில்டர்ஸ்' நிறுவனம் மூன்று தொகுப்புகளிலுமே மிகக் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு 'L1' நிறுவனமாகத் தேர்வாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அரசு நிர்ணயித்த ₹5.54 கோடியை விட சுமார் 32% குறைவாக, அதாவது வெறும் ₹3.78 கோடிக்கு இப்பணிகளை முடித்துத் தருவதாக ராசி பில்டர்ஸ் ஒப்பந்தப் புள்ளியைச் சமர்ப்பித்துள்ளது.
தொகுப்பு வாரியான நிதி ஏல விவரம்
தொகுதி 1 : அரசு மதிப்பீடு ₹2.41 கோடி. ராசி பில்டர்ஸ் 18% ஜிஎஸ்டி உட்பட ₹1.66 கோடி கோரி L1 இடத்தைப் பிடித்தது. மதுரையைச் சேர்ந்த ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ₹2.00 கோடி எனக் குறிப்பிட்டு L2 இடத்தைப் பெற்றது.
தொகுதி 2 : அரசு மதிப்பீடு ₹2.01 கோடி. ராசி பில்டர்ஸ் ₹1.37 கோடிக்கு ஏலம் எடுத்து முதலிடம் பெற்றது. ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ₹1.70 கோடியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
தொகுதி 3 : அரசு மதிப்பீடு ₹1.12 கோடி. ராசி பில்டர்ஸ் ₹74.94 லட்சம் எனக் குறிப்பிட்டு L1 ஆனது. ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ₹88.33 லட்சத்துடன் L2 இடத்தைப் பெற்றது.
இந்த டெண்டர் நடைமுறையில் மொத்தம் 5 நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் 'யுடெக் இன்ஜினியரிங்' நிறுவனம் தொழில்நுட்ப ஆய்வின் போதே தகுதிநீக்கம் செய்யப்பட்டது. மீதமிருந்த நான்கு நிறுவனங்களில் ராசி பில்டர்ஸ் மற்றும் ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனங்களைத் தவிர்த்து, எம் கியூப் இன்ஃப்ரா மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் ஆகியவையும் ஏலத்தில் பங்கேற்றன.
எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான புகார்கள்
ஏலம் திறக்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்தத் திட்டத்தின் மீது பலத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன:
முறைப்படி டெண்டர் கோருவதற்கு முன்பாகவே, ஜூலை மாத இறுதியிலேயே நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உடைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. ஆகஸ்ட் 12-13 தேதிகளில் நாளிதழ்களில் விளம்பரம் வந்தபோதும், அரசு விதிகளின்படி இ-டெண்டர் தளத்தில் உடனே ஆவணங்கள் பதிவேற்றப்படவில்லை. பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய பின்னரே ஆகஸ்ட் 17 அன்று இணையதளத்தில் ஆவணங்கள் சேர்க்கப்பட்டன.
இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களில் திட்ட மதிப்பீட்டுத் தொகை குறிப்பிடப்படாமல் மறைக்கப்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் கிளப்பின.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை மற்றும் தவெக அமைச்சர்கள், "முன்பு இருந்த மேஜைகள், நாற்காலிகள் போன்ற பழைய மரச்சாமான்களை அப்புறப்படுத்தும் பணியே ஜூலையில் நடந்தது; டெண்டர் பணிகள் இறுதி செய்யப்படாமல் எந்த கட்டுமானப் பணியும் தொடங்கப்படவில்லை" என்று திட்டவட்டமாக மறுத்தனர். மேலும், பழைய கோட்டை அலுவலகத்தில் போதிய இடவசதியும் கழிப்பறை வசதிகளும் இல்லாததால், முதலமைச்சர் அலுவலகப் பணியாளர்கள் 80 பேரின் நிர்வாக வசதிக்காகவே இந்த இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது, அரசு மதிப்பீட்டை விட 32% குறைவாக ₹3.78 கோடிக்கு ஒப்பந்தம் போயிருப்பதால் அரசு கஜானாவிற்கு ₹1.76 கோடி மிச்சமாகியுள்ளது என்றும், முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கூறப்பட்டவை என்றும் ஆளுங்கட்சியினர் வாதிடுகின்றனர். அதேநேரம், ஒரே நிறுவனம் மூன்று பிரிவுகளையும் கைப்பற்றியிருப்பதும், மதிப்பீட்டை விட மிகக் குறைந்த விலைக்குப் பணிகள் எடுக்கப்பட்டிருப்பதால் கட்டுமானத் தரம் பாதிக்கப்படுமா அல்லது பின்னாளில் கூடுதல் செலவு மதிப்பீடுகள் வருமா என்ற கேள்விகளையும் அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
